இயற்கை வேளாண்மைக்கு மத்திய அரசின் சுருக்குக் கயிறு

Discussion in 'Green revolution /pasumai Ulagam' started by NATHIYAMOHANRAJA, Feb 6, 2019.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,340
  Likes Received:
  505
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  மண்ணில் வாழும் உயிர்க்கெல்லாம் சோறிடல் வேண்டும்’ என்பது தமிழரின் பண்பாடு. அப்படி இடப்படும் சோறு, நஞ்சில்லாத சோறாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் கனவும். ஆனால், ‘இது நஞ்சில்லாத சோறுதான் என்று சான்றிதழ் அளிக்க வேண்டும்’ என்று விருந்துக்கு வந்தவர்கள் கேட்டால் எப்படியிருக்கும்?
  ‘விருந்துக்கு வந்தவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ, விருந்தோம்பல் செய்பவர்கள் சான்றிதழைக் காட்டித்தான் ஆக வேண்டும். அதுவும் பக்கத்து வீட்டிலிருந்து சான்றிதழ் பெற்று வர வேண்டும்’ என்கிறது மத்திய அரசு!
  ஆம்… வரும் ஜூலை 1-ம் தேதி முதல் ‘எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.’ (FSSAI) எனப்படும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், ‘இயற்கை வேளாண் முறையில் விளைவிக்கப்பட்டது என்ற பெயரில் வரும் அனைத்து உணவுப் பொருட்களும் மூன்றாம் தரப்புச் சான்றிதழ் (third party certification) பெற வேண்டும்’ என்கிற விதியை நடைமுறைப்படுத்த உள்ளது.
  ‘இது நல்ல விஷயம்தானே?’ என்று பலர் கேட்கலாம். நல்ல விஷயம்தான். ஆனால், அதற்குப் பின்னணியில் உள்ள சிக்கல்களைத் தெரிந்துகொண்டால் இதிலிருக்கும் வணிகச் சூழ்ச்சியும் ஊழல் செய்வதற்கான சாத்தியங்களும் அதிகம் இருப்பது தெரிய வரும்.
  போலிகளால் வந்த பிரச்சினை
  பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், வேதி உரங்கள் போன்றவற்றைத் தெளித்து, நமது மண்ணும், நீரும், காற்றும், உணவும் விஷமாகிவிட்டன. அவற்றால், மனிதர்களுக்குப் பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதைப் பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
  அதனால் இன்று, ‘நஞ்சில்லா உணவு’ (ஆர்கானிக்) எனும் லட்சியத்தை நோக்கி, உழவர்களும் நுகர்வோர்களும் நடைபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பயணத்தில் பல பிரச்சினைகளும் வருகின்றன. லாபம் சம்பாதிப்பதற்காகவே ‘இயற்கை வேளாண் பொருட்கள்’ என்று கூறி தவறான ஆட்கள் பலர், தெருவுக்குத் தெரு, புதிது புதிதாகக் கடைகளைத் திறக்கின்றனர். இதனால், ‘இயற்கை வேளாண் பொருள்’ என்ற பெயரில், பல போலிகள் அதிக விலையுடன் நம்மை நோக்கி வருகின்றன. இதை எப்படிக் கட்டுப்படுத்துவது?
  உண்மையான இயற்கை உழவர்கள், இயற்கை வேளாண் அங்காடி வைத்திருப்பவர்கள், தங்கள் மனசாட்சிக்கு உட்பட்டு, சுயக் கட்டுப்பாடு, தரம் நிறைந்த தன்னார்வச் செயல்பாடு போன்றவற்றைக் கொண்டிருந்தால், நுகர்வோர் போலிகளைத் தவிர்த்துவிடுவார்கள். அதன் மூலம், போலிகளின் வரவைக் கட்டுப்படுத்தலாம்.
  [​IMG]

  இதே கட்டுப்பாடு, அரசால் கொண்டு வரப்பட வேண்டும் என்றால், அது இயற்கை உழவர்கள், விற்பனையாளர்கள், நுகர்வோர் ஆகியோரை உள்ளடக்கியதாக, அனைவருக்கும் பயன்படும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதற்கு, இயற்கை உழவர்களைப் பற்றியும், விற்பனையாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றியும், நுகர்வோரின் குறைகள் குறித்து விழிப்புணர்வும் புரிதலும் ‘கட்டுப்பாட்டுச் சட்டத்தை’ உருவாக்குபவர்களிடம் இருக்க வேண்டும்.
  தற்போது, எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. அறிமுகப்படுத்தியிருக்கும் விதியைப் பார்த்தால், மேற்சொன்னபடி எந்த விழிப்புணர்வும் புரிதலும் இல்லாமல், இந்த விதி இயற்றப்பட்டிருப்பது தெரியும்.
  சான்றிதழ் எனும் சுருக்கு!
  இயற்கை வேளாண்மை பிரபலமடைந்து வந்த கட்டத்தில், இந்த விஷயத்தில் போலிகள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக ‘தேசிய அங்கக உற்பத்தி திட்டமும்’ (என்.பி.ஓ.பி) ‘பரஸ்பர குழுச் சான்றிதழ் திட்டமும்’ அறிமுகப்படுத்தப்பட்டன.
  இவற்றில், என்.பி.ஓ.பி. சான்றிதழ் முறை, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் 2001-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவே, ‘மூன்றாம் தரப்பு சான்றித’ழாக இருந்து வருகிறது. இயற்கை வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்கிற பெரு உழவர்கள், விற்பனையாளர்கள், இந்தச் சான்றிதழ் முறையைப் பின்பற்றி வந்தனர். சான்றிதழ் பெறுவதற்கான செலவு, தேவைப்படும் ஆவணங்கள் ஆகியவை இந்த முறையில் அதிகம். எனவே, சிறு, குறு உழவர்கள் இந்தச் சான்றிதழ் முறையைப் பின்பற்றவில்லை.
  பரஸ்பர குழுச் சான்றிதழ் முறை 2015-ல், மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், ஒரு கிராமத்தில் இருக்கும் இயற்கை உழவர்கள் இணைந்து, ஒருவருக்கு ஒருவர், ‘இவர் இயற்கை வேளாண்மை முறையில்தான் இதை உற்பத்தி செய்தார்’ என்று பரஸ்பரம் சாட்சியம் அளிப்பார்கள். இந்தச் சான்றிதழ் முறை, செலவு குறைந்ததாகவும், குறைந்த அளவே ஆவணங்கள் தேவைப்படுவதாலும், சிறு, குறு உழவர்களிடையே இது பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
  இதில் என்ன முக்கியமான விஷயம் என்றால், இந்த இரண்டு சான்றிதழ்களையும், இயற்கை உழவர் ஒருவர் தன்னார்வமாக முன்வந்து பெற்றுக்கொள்ளலாம். ‘இப்படி ஒரு சான்றிதழ் பெற வேண்டும்’ என்ற கட்டாயம் எதுவும் இதுவரை இல்லை.
  ஆனால், வரும் ஜூலை முதல் இயற்கை வேளாண் முறையில் விளைவிக்கப்பட்டது என்று சொல்லி, தயாரிக்கப்படும் எந்த ஒரு பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருளுக்கும், மேற்கண்ட இரண்டு சான்றிதழ் முறைகளில் ஏதேனும் ஒரு வகையில் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்கிறது எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.
  விடை தெரியாத கேள்விகள்
  பல சிறு, குறு உழவர்கள் மூலப் பொருட்களை மட்டுமே இயற்கை வேளாண்மை மூலம் உற்பத்தி செய்கின்றனர். அதை நேரடியாக நுகர்வோருக்கு விற்பதற்குச் சான்றிதழ் தேவையில்லை என்கிறது இந்த விதி. ஆனால் வழக்கமான வரையறைப்படி, 5 ஏக்கருக்கும் மேற்பட்ட உழவர் ஒரு சிறிய உழவராகக் கருதப்படுவதில்லை. 6 அல்லது 7 ஏக்கர் வைத்திருக்கும் ஒரு உழவருக்கும்கூட, சான்றிதழ் செலவு என்பது பெரும் பாரமே! இது ஒரு புறமிருக்க, எத்தனை உழவர்களால் தாங்கள் விளைவித்த பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய முடியும்?
  [​IMG]

  அப்படியே உழவர்கள், நேரடி விற்பனையில் கவனம் செலுத்தினால், அவர்களது இதர விவசாய நடவடிக்கைகள் மோசமாகப் பாதிக்கப்படும். ஆகவே, அவர்கள் தரகரையோ, கடைகளையோ, வர்த்தகரையோ நாடித்தான் ஆக வேண்டும்.
  அதனால் நேரடியாக இயற்கை உழவர்களிடம் வாங்கி, அதை நேரடி விற்பனை செய்வதற்கு விதிவிலக்கு இருக்க வேண்டும். வெளிப்படைத்தன்மை, உழவர் வரை தொடர்புபடுத்த முடிந்த பரிமாற்றங்களுக்கும் விதிவிலக்கு இருக்க வேண்டும்.
  பரஸ்பர குழுச் சான்றிதழ் பெறுவதில் என்ன பிரச்சினை என்றால், ஒரு உழவர் தன்னுடைய மூலப் பொருட்களைக் கொண்டு பதப்படுத்தப்பட்ட உணவைத் தயாரிக்க வேண்டும் என்றால், அதைத் தன் குழுவினரின் மேற்பார்வையில்தான் மேற்கொள்ள வேண்டும். தன்னுடைய மூலப்பொருட்களை, இன்னொரு குழுவிடமோ அல்லது தனியார் அமைப்பிடமோ கொண்டு செல்ல முடியாது. அதாவது, உழவர் ஒருவர், கோதுமையை உற்பத்தி செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.
  அதை மாவாக்க வேண்டுமென்றால், அவரிடமோ அல்லது அவர் குழுவினரிடமோ கோதுமை அரைக்கும் மாவு மில் இருக்க வேண்டும். அதற்குத் தனியாகச் சான்றிதழ் பெற வேண்டும். இது எத்தனை உழவர்களால் அல்லது எத்தனை விவசாயக் குழுக்களால் சாத்தியப்படும்?
  என்.பி.ஓ.பி. சான்றிதழோ அல்லது பரஸ்பர குழுச் சான்றிதழோ… இரண்டில் எதைப் பெற வேண்டுமானாலும், ஒரு உழவர், விண்ணப்பித்த தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள்வரை காத்திருக்க வேண்டும். அதுவரை, அவர் உற்பத்தி செய்த பொருட்களை ‘இயற்கை வேளாண் பொருள்’ என்று எங்குமே விற்பனை செய்ய முடியாது. அப்படி என்றால், அவரது நிலைமை என்னவாகும்?
  20 ஏக்கர், 30 ஏக்கர் வைத்திருக்கும் பெரு உழவர்கள், மூன்றாம் தரப்புச் சான்றிதழைப் பெறுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்தச் சான்றிதழ் அளிக்கும் நிறுவனம் எவ்வளவு தூரம் நியாயமாக நடந்துகொள்கிறது என்பதை எப்படி உறுதிசெய்ய முடியும்? 2 ஏக்கருக்கு மட்டும் கணக்கு காட்டிவிட்டு, மீதி 18 ஏக்கரில் விளையும் பொருட்களை ‘இயற்கை வேளாண் பொருட்கள்’ என்று சொல்லி, 20 ஏக்கருக்கும் சான்றிதழ் வாங்கிவிட வாய்ப்புள்ளது அல்லவா? பணம் கொடுத்து அந்தச் சான்றிதழை வழங்கும் நிறுவனத்தைச் சரிகட்டி விடுவதற்கும் வாய்ப்புள்ளது அல்லவா? இது போலிகள் உள்ளே வர வாசல் திறந்துவிடாதா?
  இந்தச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு, பல மணி நேரம் செலவு செய்து, பல இடங்களில் தகுந்த ஆவணங்களைப் பெற்று, தகுந்த கட்டணத்துடன், தகுந்த அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். படிப்பறிவு இல்லாத உழவர்களுக்கு, இதற்கான திறனும் நேரமும் இருக்கிறதா? அப்படியே இருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும், இன்னும் ஒரு மாதத்தில் அதற்கான சான்றிதழ்களை உழவர்களுக்கு வழங்க முடியுமா? காரணம், இன்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் அளிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
  [​IMG]

  நுகர்வோர் சொல்லட்டும்!
  அப்படி என்றால், போலிகளைக் கட்டுப்படுத்தவே முடியாதா, சான்றிதழ் முறையே வேண்டாமா என்று பலர் கேட்கலாம். அதற்கும் தீர்வு உண்டு.
  ஒவ்வொரு மாவட்டம் அல்லது தாலுகா அளவில், அரசே பரிசோதனை ஆய்வகங்களை அமைக்க வேண்டும். ‘இயற்கை வேளாண் அங்காடி’ ஒன்றில், நுகர்வோர் ஒருவர் ஒரு பொருளை வாங்கினால், அவர் அந்தப் பொருளை, அரசு ஆய்வகத்துக்கு எடுத்துச் சென்று, ‘இது இயற்கை வேளாண் முறையில் விளைவிக்கப்பட்ட பொருள்தானா?’ என்பதைப் பரிசோதிக்கட்டும். அப்போது, போலி அங்காடிகள் எது, போலி உழவர்கள் யார் என்பதெல்லாம் தெரிந்துவிடும்.
  அந்த ஆய்வகம் அளிக்கும் சான்றிதழை வைத்து, அந்தப் போலிகள் மீது அரசால் நடிவடிக்கை எடுக்கவும் முடியும். இந்த முறையில், ஊழல் நடைபெறுவதும் தடுக்கப்படும். ஆனால், நிஜமான அக்கறையை வெளிப்படுத்தும் இந்த நடவடிக்கையை அரசு எடுக்குமா?
   

Share This Page