குஷியான வருமானம் கொடுக்கும் குருஷ் முருங்கை... ஆண்டுக்கு ரூ. 19,80,000 லாபம்!

Discussion in 'Green revolution /pasumai Ulagam' started by NATHIYAMOHANRAJA, May 15, 2019.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,217
    Likes Received:
    486
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    வியல், கூட்டு, சாம்பார் எனப் பலவித உணவுகளில் முக்கிய இடம் பிடிக்கும் காய், முருங்கைக்காய். ஐயப்பன் பூஜை விரதகாலங்கள், திருவிழாக்கள், முகூர்த்த தினங்கள் போன்ற காலங்களில் முருங்கையின் விலை உச்சத்துக்குப் போய்விடும். கிராமங்களில் ‘முருங்கையைப் போட்டவன் வெறுங்கையா நின்னதில்லை’ என்று ஒரு சொலவடை சொல்வதுண்டு.
    [​IMG]
    முருங்கைக்கு எப்போதும் சந்தையில் விற்பனை வாய்ப்பு இருப்பதால் பெரும்பாலான விவசாயிகள் முருங்கையை விரும்பிச் சாகுபடி செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தர்மலிங்கம். இவர், ‘குருஷ்’ எனும் ரக முருங்கையை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார்.

    திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை எனும் ஊரிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்தோணியார்புரம் எனும் கிராமத்தில் சாலை ஓரத்திலேயே இருக்கிறது, தர்மலிங்கத்தின் முருங்கைத் தோட்டம். நம் வருகைக்காகத் தோட்டத்தில் காத்திருந்த தர்மலிங்கத்திடம், நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் வரவேற்றுப் பேச ஆரம்பித்தார்.

    “எனக்குச் சொந்த ஊர் திசையன்விளைதான். ஐந்தாம் வகுப்புக்கு மேல பள்ளிக்கூடத்துக்குப் போகலை. சின்ன வயசுலயே அப்பாகூட வாழைக்காய் வியாபாரம் பார்க்க வந்துட்டேன். 1982-ஆம் வருஷம் முருங்கைக்காய் விவசாயத்தை ஆரம்பிச்சேன். திசையன்விளையில திரும்புன பக்கமெல்லாம் முருங்கைக்காய் மரமாத்தான் நிக்கும். ஆரம்பத்துல ‘யாழ்ப்பாணம் முருங்கை’யைத்தான் வெச்சேன். அடியுரமா குப்பை போட்டாலும், ஊட்டத்துக்கு ரசாயன உரம் போட்டுத்தான் சாகுபடி செஞ்சுக்கிட்டுருந்தேன். அப்படியே போய்க்கிட்டுருந்த சமயத்துல 2008-ஆம் வருஷம், எங்க ஊர்ல இருக்குற ஒரு டீக்கடையில ‘பசுமைவிகடன்’ புத்தகத்தைப் பார்த்தேன். அதுல இயற்கை விவசாயம் பத்தி நிறையத் தகவல்கள் இருந்துச்சு. அதுக்கப்புறம்தான் அதைத் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன்.
    [​IMG]
    இப்போ வரைக்கும் அத்தனை பசுமை விகடன் புத்தகங்களையும் பத்திரமா வெச்சுருக்கேன். ‘பசுமை ஒலி’ பகுதியில் இருக்குற தொலைபேசி எண் மூலமாகப் பஞ்சகவ்யா தயாரிக்கிறதைப்பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கப்புறம் ரசாயன உரங்களை நிறுத்திட்டு இயற்கைக்கு மாறினேன்” என்று இயற்கை விவசாயத்துக்கு மாறிய கதை சொன்ன தர்மலிங்கம், முருங்கைத் தோட்டத்தைச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தார்.

    “இது எல்லாம் ‘குருஷ்’ங்கிற முருங்கை ரகம். எங்க பகுதியில யாழ்ப்பாணம் முருங்கைக்கு அடுத்தபடியா பிரபலமான முருங்கை ரகம் ‘குருஷ் முருங்கை’. குருஷ் ரகம் எப்படி எங்க பகுதிக்கு வந்துச்சுனு தெரியலை. இந்தப்பக்கம் அழகிவிளை, டேனியல், குருஷ், கரும்புனு பல முருங்கை ரகங்களைச் சாகுபடி செய்றாங்க. குருஷ் முருங்கைக்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படாது. காய்கள் நீளமாகவும் நுனி வளையாமலும் இருக்கும். காய்களைப் பறிச்சு மூணு நாள்கள் வரைக்கும் இருப்பு வைக்கலாம். அதனால, இந்தப்பகுதியில அதிகமா குருஷ் ரகத்தைத்தான் சாகுபடி செய்றாங்க. எட்டு வருஷத்துக்கு முன்னாடி, போலையார்புரம்ங்கிற கிராமத்திலிருந்து இந்த குருஷ் முருங்கைக் குச்சிகளை வாங்கிட்டு வந்து நட்டு வெச்சேன். இயற்கை முறையில இது நல்லா விளையுது. இங்க மொத்தம் 10 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல 6 ஏக்கர் நிலத்துல குருஷ் முருங்கை பறிப்புல இருக்கு. மீதி 4 ஏக்கர் நிலத்தை முருங்கைச் சாகுபடிக்காகத் தயார் பண்ணி வெச்சுருக்கேன்” என்ற தர்மலிங்கம் மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.
    [​IMG]
    “ஒரு ஏக்கர் நிலத்துல 100 மரங்கள் நடவு செய்யலாம். இந்த அளவு நிலத்துல இருந்து வருஷத்துக்குச் சராசரியா 12 டன் வரை மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ முருங்கை குறைந்தபட்சம் 7 ரூபாய்ல இருந்து அதிகபட்சம் 80 ரூபாய் வரைக்கும் விலை போகுது. மொத்தமாகக் கணக்குப் பார்க்குறப்போ... ஒரு கிலோவுக்கு 30 ரூபாய்க்கு மேல விலை கிடைச்சுடும். அந்த வகையில பார்த்தா 12 டன் முருங்கை மூலமா, 3,60,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. குப்பை, இடுபொருள் தயாரிப்பு, தெளிப்பு, பறிப்புக்கூலினு எல்லாம் சேர்த்து வருஷத்துக்கு ஒரு ஏக்கருக்கு 30,000 வரை செலவாகும். அதுபோக ஒரு ஏக்கர் முருங்கை மூலமா வருஷத்துக்கு 3,30,000 ரூபாய் லாபம் கிடைக்குது. மொத்தம் 6 ஏக்கர் நிலத்துக்கும் சேர்த்து வருஷத்துக்கு 19,80,000 ரூபாய் லாபம் கிடைக்கும்” என்ற தர்மலிங்கம் நிறைவாக, “என்னடா முருங்கையில இவ்வளவு வருமானமானு கொஞ்சம் மலைப்பாத்தான் இருக்கும். ஆனா, உண்மையில இதைவிட அதிக லாபம் எடுத்துட்டுருக்கேன். மகசூலையும் சரி, வருமானத்தையும் சரி கொஞ்சம் குறைச்சுத்தான் நான் சொல்லிருக்கேன். சரியான முறையில நடவு, தேவையான சமயத்துல உரம், பருவத்துல கவாத்துனு கண்ணும் கருத்துமாகப் பராமரிச்சா, இந்த வருமானம் சாத்தியம்தான். என்னைப் பொறுத்தவரை அதிகப்பராமரிப்பு இல்லாமல் நிறைவான வருமானம் கொடுக்குறது முருங்கை மட்டும்தான்” என்று சொல்லிக்கொண்டே முருங்கைக்கட்டுகளைத் தூக்கிக்காட்டியபடி விடைகொடுத்தார்.

    தொடர்புக்கு, தர்மலிங்கம், செல்போன்: 99760 11750

    இ.கார்த்திகேயன் படங்கள்: எல்.ராஜேந்திரன்

    மூலிகைப் பூச்சிவிரட்டி!

    து
    ளசி, ஆடாதொடை, எருக்கன், சீத்தா, பப்பாளி, கொய்யா, வேம்பு ஆகிய இலைகளில் தலா 5 கிலோ அளவு எடுத்து நறுக்கி, 20 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் 8 நாள்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பூச்சிவிரட்டி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம்.

    ‘குருஷ்’ முருங்கை பெயர்க் காரணம்!

    கு
    ருஷ் முருங்கை ரகம் குறித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விஞ்ஞானி முனைவர் உதயகுமாரிடம் பேசினோம், “கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள விவசாயி தர்மலிங்கத்தின் தோட்டத்திற்குச் சென்றிருந்தபோது ‘குருஷ்’ என்ற மரமுருங்கை ரகத்தைக் காண்பித்தார்.
    [​IMG]
    இம்முருங்கை மரத்தில் கீரைகள் பச்சை நிறமாகவும் காய்கள் நீளமாகவும் இருந்தது. காய்களின் நுனிப்பகுதி வளையாமல் இருப்பதுதான் இதன் சிறப்பம்சமாக உள்ளது. வருடத்தில் மூன்று முறை மகசூல் கிடைக்கும் எனவும், ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்குச் சராசரியாக 2 ஆயிரம் காய்கள் வரை கிடைக்கும் எனவும் விவசாயிகள் சொன்னார்கள்.

    ஓரளவு வறட்சியைத் தாங்கி வளரும். முறையாகக் கவாத்து செய்து பராமரித்தால் 10 ஆண்டுகளுக்கு மேலும் தொடர்ந்து மகசூல் எடுக்கலாம். இந்த ரகத்தை குரூஸ், குருசு, துருசு எனவும் சொல்கிறார்கள்.

    இந்த குருஷ் தவிர, யாழ்ப்பாணம், அழகிவிளை, டேனியல், கரும்பு ஆகிய ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டாலும், தற்போது இந்த குருஷ் ரக முருங்கை திசையன்விளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகமாகச் சாகுபடி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ரக மரமுருங்கையின் பெயர் விளக்கம் விவசாயிகளுக்குத் தெரியவில்லை. யாழ்ப்பாணம், அழகிவிளை, வலையப்பட்டி, சாகவச்சேரிபோல அந்தந்தப் பகுதிகளின் பெயராலும், குருஷ், டேனியல் என்று அதைச் சாகுபடி செய்து பரவலாக்கிய விவசாயியின் பெயரையே ரகத்திற்கும் பெயராகச் சூட்டியுள்ளார்கள்” என்றார்.

    தொடர்புக்கு, செல்போன்: 94425 42915

    இப்படிதான் சாகுபடிச் செய்யணும்!

    ரு ஏக்கர் நிலத்தில் குருஷ் ரக முருங்கையை இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விதம் குறித்துத் தர்மலிங்கம் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

    முருங்கைச் சாகுபடிக்குச் செம்மண் ஏற்றது. அதிகமான மழை பெய்யும் காலங்கள் தவிர்த்து மற்ற காலங்களில் இதை நடவு செய்யலாம். கோடைக்காலத்தில் நடவு செய்யும்போது, தென்னை ஓலை அல்லது பனை ஓலைமூலம் நிழல்வசதி செய்ய வேண்டும். நிலத்தில் களைகள் போகுமாறு நன்கு உழுது, மண்ணைப் பொலபொலப்பாக்க வேண்டும். பிறகு 20 அடி இடைவெளியில் ஒரு கனஅடி அளவில் குழிகள் எடுத்து 5 நாள்கள் ஆறவிட வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் 100 குழிகள்வரை எடுக்கலாம்.

    தாய் மரத்திலிருந்து நடவுக்குத் தேர்வு செய்யும் குச்சிகள் கை மணிக்கட்டுத் தடிமனில் இரண்டரை அடி நீளம் வரை இருக்க வேண்டும். தாய் மரம் நல்ல காய்ப்புத்திறன் கொண்டதாக இருக்க வேண்டும். குச்சியின் இரண்டு முனைகளையும் பஞ்சகவ்யா கரைசலில் நனைத்து, குழிக்குள் ஓர் அடி அளவு குச்சி இருக்குமாறு நடவு செய்து, குழியை மூடித் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர் கொடுத்தால் போதுமானது.

    நடவு செய்த 10-ஆம் நாளுக்கு மேல் தளிர்கள் வரும். 10-ஆம் நாளிலிருந்து 10 நாள்களுக்கு ஒருமுறை, 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளித்து வர வேண்டும். பூக்கள் பூக்கும் சமயத்தில் பஞ்சகவ்யா கரைசலுடன் 50 மில்லி தேங்காய்த் தண்ணீர் (இளநீர் என்றால் 25 மில்லி) சேர்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து 4 முறை மட்டும் தேங்காய்த் தண்ணீர் சேர்த்துக்கொண்டால் போதுமானது. நடவு செய்த 2-ஆம் மாதத்தில் கன்றின் தூர்ப்பகுதியில் 3 கிலோ அளவில் தொழுவுரத்தை வைக்க வேண்டும். தொடர்ந்து 4 மாதங்களுக்கு ஒருமுறை தொழுவுரம் வைக்க வேண்டும். 120-ஆம் நாளுக்கு மேல் பூக்கள் பூக்கும். பூக்கள் பூத்ததிலிருந்து 7 நாள்கள் இடைவெளியில் தொடர்ந்து 10 லிட்டர் தண்ணீருக்கு 40 மில்லி இ.எம் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து தெளித்து வர வேண்டும். பூத்ததிலிருந்து ஒருமாதம் கழித்துக் காய்கள் பறிக்கலாம்.

    முருங்கையில் பூப்பூக்கும் காலம், மழைக்காலம் மற்றும் மேகமூட்டம் இருக்கும் காலங்களில் நூற்புழுக்கள் மற்றும் தேயிலைக்கொசுக்களின் தாக்குதல் இருக்கும். இவற்றைக் கட்டுப்படுத்தாவிடில் மரமே காலியாகிவிடும்.

    பூ எடுப்பதற்கு முன்பே 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி மூலிகைப் பூச்சிவிரட்டி என்ற கணக்கில் தெளித்து, இவற்றைக் கட்டுப்படுத்தலாம். நடவு செய்த 2-ஆம் ஆண்டிலிருந்து காய்ப்பு அதிகரிக்கும். ஆண்டுக்கு 8 மாதங்கள் வரை காய் பறிக்கலாம். அதிக மழை பெய்யும் காலங்களில் காய்ப்பு இருக்காது.

    முருங்கை மரங்களில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் கவாத்துச் செய்ய வேண்டும். கவாத்து செய்தால் காய்ப்புத் தன்மை அதிகரிக்கும். அதேசமயம் மரங்கள் அடர்த்தியாகவும் உயரமாகவும் வளர்வதைத் தடுக்கலாம். அதனால், எளிதாகக் காய்களைப் பறிக்க முடியும். கவாத்துச் செய்யும்போது மரத்தின் நான்கு புறக்கிளைகளையும் வெட்டிவிட்டுத் தூர்ப்பகுதியில் கவனமாக வெட்ட வேண்டும். தூர்ப்பகுதியில் பிளவு ஏற்பட்டுவிடாமல் கவாத்துச் செய்ய வேண்டும். சரியான முறையில் கவாத்துச் செய்து பராமரித்து வந்தால், பல ஆண்டுகள் நின்று மரங்கள் பலன் கொடுக்கும்.
     

Share This Page