திருவாசகம் எழுதிய தித்திக்கும் திருவாசகம்

Discussion in 'Non Fiction' started by malarmathi, Jun 14, 2018.

 1. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  411
  Likes Received:
  332
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
  சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர், பாண்டிய நாட்டில் வைகை ஆற்றங்கரையில் உள்ள திருவாதவூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் வாதவூரார் என்பதாகும்.

  கல்வி கேள்விகளில் சிறந்துவிளங்கிய வாதவூராரின் அறிவாற்றலை அறிந்து, அரிமர்த்தன பாண்டியன் தன் அவையில் அமைச்சர் பதவி வழங்கினான். உயர்ந்த பதவி, செல்வம் அனைத்தும் இருந்தும், இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்து சைவ சித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாட்டை பின்பற்றினார்.

  ஒருசமயம், சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்ட மன்னன், வாதவூராரை குதிரைகள் வாங்கி வரும்படி பணித்தான். குதிரை வாங்க தேவையான பொன்னும் கொடுத்தனுப்பினான். அதே நேரத்தில் சிவபெருமான் தன் திருவிளையாடலை ஆரம்பித்தார்.

  ஒரு குருவைப் போல வேடம் பூண்டு, திருப்பெருந்துறை என்னும் தலத்தில், குருந்த மரம் ஒன்றின் அடியில் அமர்ந்து கொண்டார். திருப்பெருந்துறையை அடைந்த வாதவூரார், அங்குள்ள ஆலயத்திற்கு சென்றார். அங்கு குருந்த மரத்தடியில் இருந்த குருவை, சிவனே அவர் என்று உறுதியாக எண்ணினார். பணிந்து வணங்கினார். அப்போது ஈசன் திருவடி வாதவூரார் தலையில் பட்டது.

  மறுகணமே ஈசனை நினைத்து பாமாலை பாடினார். பாமாலை கேட்டு பரமேஸ்வரன் உருகினார். ‘நீ பாடிய செந்தமிழின் ஒவ்வொரு வார்த்தையும் மாணிக்கம் போன்றது. மாணிக்கவாசகனப்பா நீ’ என்று ஆசீர்வதித்துமறைந்தார் இறைவன்.

  மாணிக்கவாசகர் அங்கேயே தங்கி திருப்பணி செய்ய முடிவு செய்தார். இதற்காக மன்னன் கொடுத்த பொன்னையெல்லாம் செலவு செய்தார். பல நாட்கள் கடந்த நிலையிலும் மாணிக்கவாசகர் வராததால், அவருக்கு மன்னன் ஓலை அனுப்பினான். அதனைப் பார்த்த மாணிக்கவாசகர், ஈசனை தேடி ஓடினார்.

  ‘ஐயனே! மன்னன் கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பணிக்காக செலவிட்டுவிட்டேன். இப்போது நான் என்ன செய்வது?’ என்று கண்ணீர் வடித்தார். ‘ஆடி மாதம் முடிவதற்குள் குதிரைகள் வந்துசேரும் என்று மறு ஓலை அனுப்பு’ என்று அசரீரி கேட்டது. மாணிக்கவாசகரும் அவ்வாறே செய்தார். சிறிது நாள் கழித்து மாணிக்கவாசகரை, மதுரைக்கு திரும்பும்படி ஈசன் கூறினார்.

  அதன்படி மதுரை திரும்பியவரிடம், ‘குதிரைகள் எங்கே?’ என்று கேட்டான் மன்னன். ‘நீங்கள் இதுவரை பார்த்திராத அழகிய திடமான குதிரைகள் வந்து கொண்டிருக்கின்றன’ என்றார் மாணிக்கவாசகர். ஆனால் ஆடிமாதம் கடைசி நாள் காலை வரை குதிரைகள் வராததால் கோபம் கொண்ட மன்னன், மாணிக்க வாசகரை சிறையில் அடைத்து சித்திரவதை செய்ய உத்தரவிட்டான்.

  இதற்கிடையில் ஈசன், காட்டில் இருந்த நரிகளை, குதிரைகளாக்கி மதுரைக்கு அனுப்பிவைத்தார். அதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தான் மன்னன். ஆனால் அன்று இரவே குதிரைகள் மீண்டும் நரிகளாக மாறி ஓடிவிட்டன. மன்னனின் கோபம் எல்லை கடந்தது.

  மாணிக்க வாசகரை வைகை ஆற்றில் சுடு மணலில் நிறுத்தினான். அவர் ஈசனை நினைத்து வேண்டினார். அப்போது ஆற்றில் வெள்ளம் மதுரையை சூழ்ந்தது. மாணிக்கவாசகரை சுற்றிலும் தண்ணீர் கால் அளவுக்கே ஓடியது.

  ஆற்றின் கரையை அடைக்க வீட்டிற்கு ஒருவர் வரவேண்டும் என்று மன்னன் உத்தரவிட்டான். அவ்வூரில் வந்தி என்ற மூதாட்டி புட்டு விற்று பிழைத்து வந்தாள். தினமும் ஒரு புட்டை ஈசனுக்கு படைத்து, அடியவர்களுக்கு அளிப்பாள்.

  வயோதிகம் காரணமாக கூலி ஆள் தேடினாள் வந்தி. அப்போது ஈசன், பணியாள் வேடம் கொண்டு தனக்கு புட்டு தந்தால், பணிக்கு செல்வதாக கூறவே, பாட்டியும் கொடுத்தாள்.

  பணிக்கு சென்ற ஈசன், பணியை கவனிக்காமல் ஓரிடத்தில் படுத்து உறங்கினார். அப்போது அங்கு வந்த மன்னன், பிரம்பால் ஈசனை அடித்தான். அந்த அடி உலக உயிர்கள் அனைத்தின் மீதும் விழுந்தது.

  மன்னன் திகைத்தான். பணியாள் உருவில் வந்த ஈசன் ஒரு கூடை மண்ணை ஆற்றின் கரையில் கொட்டியதும் வெள்ளம் வடிந்தது. இது தனது திருவிளையாடலே என்று உரைத்து ஈசன் மறைந்தார். மாணிக்கவாசகரை மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்க மன்னன் கூறியும், மறுத்து சிதம்பரம் சென்றார் மாணிக்கவாசகர்.

  தில்லையம்பதியானை நினைத்து அவர் திருவாசகம் பாட, அதனை அங்கிருந்த வேதியர் ஒருவர் சுவடியில் எழுதினார். இறுதியில் பாடலின் அடியில் திருவாதவூரார் கூற திருச்சிற்றம்பலமுடையான் எழுதியது என்று கையெழுத்திட்டு, அந்த வேதியர் மறைந்தார். அப்போதுதான் தான் பாடிய திருவாசகத்தை எழுதியது சிவபெருமான் என்பதை அவர் அறிந்தார்.

  பன்னிரு திருமுறைகளில் 8–ம் திருமுறை மாணிக்க வாசகரால் பாடப்பட்ட திருவாசகமும், திருக்கோவையாரும் ஆகும். ஞானநெறியைப் பின்பற்றிய இவர், 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் சிவனடி சேர்ந்தார்.
   

Share This Page