ஷ்! இது வேடந்தாங்கல்! / shh Ithu Vedanthangal By Balasundar

Discussion in 'Serial Stories' started by Tamilsurabi, May 25, 2019.

 1. Tamilsurabi

  Tamilsurabi Administrator Staff Member

  Joined:
  Sep 11, 2014
  Messages:
  314
  Likes Received:
  215
  Trophy Points:
  43
  ஷ்! இது வேடந்தாங்கல்!


  (ஒரு மரத்திற்கு அடியில் நின்றுகொண்டு என்று சொன்ன காலம் மாறி) ஒரு செல்ஃபோன் டவருக்கு அடியில் நின்றுகொண்டு இருவர் கிசு கிசு பேசிக் கொண்டனர். கிசு கிசு பத்திரிக்கைகளில் மட்டும் சுவாரசியமாக இருப்பதில்லை. அலுவலகங்களில் எதிர் டேபிளில் அமர்ந்திருப்பவர் அப்போது வந்து சென்ற பெண் வாடிக்கையாளரை திருட்டுத்தனமாக திரும்பிப் பார்த்தால்.. அது அவரது சக பணியாளர்களின் கைபேசியில் பகிரப்படும் அச்சில் ஏற்றப்படாத கிசு கிசுவாகிவிடுகிறது.
  அதேபோல் நட்சத்திரங்களின் வாழ்க்கையை மட்டுமே நாம் நமது இஷ்டம்போல் துவைத்து உலரவைக்க வேண்டும் என்பதும் இல்லை. எதிர் வீட்டில் வசிக்கும் மல்லிகாவின் வாழ்க்கையைக் கூட நாம் நமது இஷ்டம்போல் துவைத்து உலரவைக்க முடியும். அப்படி இந்த இருவர் முன்னொருகாலத்தில் அவர்கள் அடித்துத் துவைத்து காயப்போட்ட ஒருத்தியைப் பற்றித்தான் செல்ஃபோன் டவருக்கடியில் நின்று பேசிக்கொண்டனர்.


  கிசு கிசு :
  ஏட்டையா பழநிவேல் : ஏய் கிரி. அந்த ஸ்ரீ கேஸ் என்ன ஆச்சு? வெங்கட் கைக்கு கேஸ் போகப் போதாமே? அந்த பொண்ணு அட்ரஸே இல்லையாமே? அதை எப்படிப்பா இவர் கண்டுபிடிப்பார்? கௌன்சிலர் ஸ்ரீயைக் கண்டுபிடிக்காமல் விடமாட்டார் போலத் தெரியுதே!


  ஏட்டையா கிரி : வெங்கட் சார் கைக்கு கேஸ் போச்சுன்னா அப்புறம் கேஸே முடிந்த மாதிரிதான். கௌன்சிலர் ஸ்ரீயைக் கண்டுபிடிப்பாரோ மாட்டாரோ வெங்கட் கண்டுபிடிச்சிடுவார். ஆமாம் அந்த பொண்ணப் பற்றிய விஷயம் ஏதாவது தெரியுமா உனக்கு?

  ஏட்டையா பழநிவேல் : அந்த பொண்ணு மசூத்தை கல்யாணம் செய்த பிறகு ஒரு நியுஸ_ம் இல்லை. நான் என்னோட மாமியார்கிட்ட கேட்டுச் சொல்றேன். அந்த பொண்ணு முன்பு இருந்த வீட்டிற்கு பக்கத்தில் தான் அவுங்க வீடும் இருக்குது.

  ஏட்டையா கிரி: ஆமாம் நம்ம பிரதமரை சந்திக்க நேதாஜி ஜப்பானில் இருந்துகொண்டு இளைஞர் படை திரட்டுறாராமே? அப்படியா?

  ஏட்டையா பழநிவேல் : அப்படித்தான் ஜனங்க பேசிக்கிறாங்க! ஆனா பிரதமரை இந்தியாவில் சந்திப்பதை விட ஏதாவது ஒரு சர்வதேச ஃப்ளைட்டில் சந்தித்தால் பக்கம் பக்கமாய் லெக்ச்சர் எடுக்கலாம் என்று நேதாஜி நினைக்கிறார்.

  ஏட்டையா கிரி: அப்படினா பிரதமர் அமெரிக்கா போயிட்டு திரும்பும்போது அவர்கிட்ட பெரிய மாற்றம் இருக்கும் என்று சொல்லு! ஃப்ளைட் ஹவர் இருபதுமணிநேரமும் நேதாஜியோட லெக்ச்சர் இருக்கும்ல?

  வெங்கட்
  மதுரையின் வியாபார மையமான கீழவாசலில் அனைத்து தெருக்களிலும் அன்று ஜனக்கூட்டம் எந்த திசையில் நகர்கிறது என்று கணிக்க முடியாதபடி இருந்தது.


  அன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம். அதுவே கூட்டத்திற்கான காரணம். பகலில் பரபரப்பாக இருக்கும் விளக்குத்தூண் வீதி இரவில் நமது மக்கள் தொகையின் அளவை உலகுக்கு சாட்சியோடு காண்பிக்கும்.

  ரோட்டோரமாய் ஒரு ஜமுகாளத்தில் எவர்சில்வர் பாத்திரங்களை பரப்பிப்போட்டு விற்றுக்கொண்டிருந்த வடநாட்டு இளைஞன் கூட்டத்தைக் கண்டு புரியாது விழித்தபடி இருந்தான். காரணத்தை தெரிந்து கொள்ள அதிக விருப்பம் கொண்டான். அவன் ஏன் மக்கள் கூட்டம் இரண்டு நாட்களாக அதிகம் ஆகியது என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் பக்கத்தில் இருந்த செருப்பு வியாபாரியிடம் கேட்டான் “என்ன சாகப் ஜனம் ரொம்ப நிறைய இருக்கு?”

  அந்த வியாபாரிக்கு தமிழில் சொன்னால் அவனுக்குப் புரியாதே என்று கருதி இந்திய மக்களிடையே பிரபலம் அடைந்த பத்து வார்த்தை அடங்கிய இந்திய மொழி எதுவாகினும் அதில் ஐந்து வார்த்தைகள் ஆக்கிரமித்துள்ள ஆங்கில மொழியில் (ஐந்து என்பது கூடிக் கொண்டேபோவதுதான் கவலையளிக்கிறது) பதில் தந்தார் “டுடே மீனாட்சி டெம்பிள் பிக் பூஜா ஆர்த்தி பங்க்ஷன். நோ.. நோ.. மேரேஜ் பங்க்ஷன். ”
  கீழவாசல் திருமலைநாயக்கர் மகால் சாலையில் குறைந்தபட்சம் ஆயிரம் மனிதர்கள் வேகமாக நடந்து கொண்டும் ஓடிக்கொண்டும் இருந்திருப்பார்கள். அதில் பெண்களே அதிகம்.


  மதுரையின் ஃபேமஸ் ஜிகர்தண்டா கடையில் முப்பது நாற்பது பேர் நின்றுகொண்டே இதமாக கொட்டும் மழையிலும் தாங்கள் வாங்கிய ஜில்லென்ற ஜிகர்தண்டாவை கிளாஸை நோக்கிக் குனிந்த தலை நிமிராமல் குடித்துக் கொண்டிருந்தனர். அந்த கூட்டத்தில் மலைத்துப் போய் தனது காரை எங்கே பார்க் செய்யலாம் என்று குழம்பியபடி ‘கடவுளே’ என்று புலம்பினான் வெங்கட் என்ற வெங்கடேஷ்.

  ஒரு வழியாக பார்க் செய்ய இடம் கிடைத்தபோது அவன் செல்பேசி “ரயில் ஆராரோ ரயில் ஆராரோ” என்று பாட்டு பாடியது. அவன் அதைக் கவனிக்காமல் காரைவிட்டு இறங்கினான். அவன் பக்கத்தில் இருந்த ஆட்டோ டிரைவர்
  “சார் உங்க போன்தான் அடிக்குது” என்றதும்


  “என் ஃபோனா? ” என்று குனிந்து பார்த்தவன் தனது ரிங்டோன் தான் என்று உறுதிசெய்துவிட்டு அசடு வழிந்துவிட்டு தனது செல்பேசியைக் கையாண்டான்.

  “ஹலோ வெங்கட் ஹியர்.” என்று நிமிர்ந்து பேசியவன் கண்களில் அணிந்திருந்த கருப்பு கூலிங்கிலாஸ் வழியாக என்னவெல்லாம் பட்டது? அவன் கண்களில் என்னவெல்லாம் பட்டது? ஐஸ்கீரிம் கேட்டு அழுத குழந்தை கண்களின் கருவிழிகூட கருப்பாக இல்லாத அழகிய இரண்டு ஸெளராஷ்ட்ரா இனப் பெண்கள் இளநீர் கடையில் அழகு ஸ்கர்ட்டும் டாப்ஸ் அணிந்த மூக்கும் முளியும் என்று சொல்வார்களே? அப்படிப்பட்ட அழகு ராட்சஸி ஒருவள். இவ்வளவு சமாச்சாரங்களை நோட்டம் விட்டாலும் ரிங்டோனில் சிதறவிட்ட கவனத்தை பேசுபவரிடம் சிதறவிடாமல் அழுத்தமாகக் கேட்டான்

  “சொல்லுங்க சார் யார் நீங்க ? ”

  “நான் 110வது வார்டு கௌன்சிலருடைய பி.ஏ பேசுறேன்... உங்ககிட்ட ஒரு வேலைகொடுக்கணும். ஒரு வேலை ஆகணும். கௌன்சிலர் நீங்கதான் சரியான தேர்வு என்று திட்டவட்டமாகச் சொல்லிட்டார். சாயங்கால வேளையில் நேரில் வரணுமே.. முடியுமா? ”

  “ம். அட்ரஸ் சொல்லுங்க. ”

  ரகசிய உளவுப்பிரிவு போலீஸ் என்றுதான் பெயர் ஆனால் நம்ம பெயர் லிஸ்ட்தான் எல்லா அதிகார வர்கத்துக்கும் முதலில் ஜாதக கட்டத்தோடு போகுது என்று எண்ணி எரிச்சல் பட்டவன் மீண்டும் கண்களிடம் அந்த அழகிய ராட்சஸி என்று அவன் மனம் வர்ணித்ததே? அந்த ராட்சஸியைப் பார்க்க உத்தரவிட்டான். அவளைப் பார்த்த நொடி சற்றுமுன் உள்ளம் அடைந்த எரிச்சல் விலகியது. உற்சாகமாக பஜாருக்கு வந்த வேலையை முடித்துவிட்டு கிளம்பினான்

  மாலை மணி ஆறு.
  அந்த பங்களாவில் அவன் கார் நுழையும் போதே அவன் எண்ணிக்கொண்டபடி பத்து சி.சி.டி.வியின் மென்பொருளில் அவன் முகம் பதிவானது.


  காரிலிருந்து இறங்கியவனை ஒரு அசத்தலான இளைஞன் வரவேற்றான் “வாங்க சார் நீங்க சரியான நேரத்துக்கு வந்திடுவீங்க என்று தெரிஞ்சதால் ஐயாவும் அரை மணி நேரம் முன்பே வந்திட்டார். ப்ளீஸ் கம் இன் வெங்கட். ”
  இளைஞனின் வரவேற்பை பெற்றுக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்ததும் லிஃப்டில் ஏறினான். லிஃப்ட் நான்காம் தளம் என்று காண்பித்தபோது அது அசைவற்றுப்போனது.


  லிஃப்டைவிட்டு வெளியே வந்தவன் அவன் வந்திறங்கிய தளத்தின் ஆடம்பரத்தை திகைப்புடன் பார்த்தான். சுவரின் அருகிலே இருந்த ஒரு கட்டிலின் பாதிபரப்பளவு கொண்ட பளீர் வெள்ளை நிற சோபாவில் அவனை அமரச் சொன்னார்கள். எதிரே உட்கார்ந்திருந்த வெள்ளை வேட்டி பெரிய மனிதர்தான் கௌன்சிலர் என்று தெரிந்து கொண்டான்.

  எதிரில் இருந்த நாற்பது வயது ஆண் பேசும் அறிகுறியே தெரியவில்லை. சாவதானமாக வெங்கட் தனது செல்பேசியை சட்டைப் பாக்கெட்டில் இருந்து எடுத்து அணைத்தான்.
  செல்பேசியை அவன் பக்கத்திலிருந்த சோபாவில் பொத்தெனப் போட்டான். அட புரிந்துகொண்டானே என்று அடுத்த நொடியில் புன்னகையுடன் நாற்பதுவயது கௌன்சிலர் பேச ஆரம்பித்தார் “உளவுத்துரையில் நீங்கதான் பெஸ்ட் என்று கேள்விப்பட்டேன். அதான் உங்களை வரவழைச்சோம். இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்டுக்கு விஷயம் போகாமல்... ”
  வெங்கட் ‘சரி’ என்று தலையசைக்கவும் அவர் மேலும் தொடர்ந்தார்.. “ஏழு வருஷம் முன்பாக என் வீட்டில் இன்கம்டாக்ஸ் ரைட் வந்தது. முன்கூட்டியே ரைட் பற்றி தெரிந்ததால் சுமார் நாற்பது எல் ரொக்கத்தை என் வைஃபின் சகோதரன் வீட்டில் வைத்திருந்தேன். அவன் பணத்தை கோட்டை விட்டுட்டான்.”


  “எப்படி?” என்று வெங்கட் கேள்வி கேட்கவும்.. தயங்கியபடி தொடர்ந்தார்
  “அவன் ஒரு பொண்ணுகூட ஜாலியாக இருந்தப்ப.. ”


  “பணத்தை அவள்தான் எடுத்திருக்கா. பவித்ரான்னு பெயர். அவளை உடனே பிடிச்சிட்டோம். ஆனால் எங்களிடமிருந்து தப்பிச்சிட்டா. நாங்களும் பிரச்சனை பெருசாகிடுமோன்னு அதன்பிறகு விஷயத்தை கொஞ்ச நாள் ஆறப்போட்டோம். அவசரத்தில் அவளை ஒரு ஃபோட்டோ கூட எடுக்காமல் விட்டுட்டோம். பிறகு எவ்வளவு முட்டினாலும் பணத்தைக் கண்டுபிடிக்க முடியல.

  பிறகு டி.ஐ.ஜி வரை மூவ் பண்ணாலும் அவளுடன் சேர்ந்து அந்த பணத்தை பட்டுவாடா செய்த இன்னொரு பொண்ணையும் கண்டுபிடிக்க முடியல. அந்த பொண்ணு பெயர் ‘ஸ்ரீ’. பவித்ராவைப் பிடித்த அன்றே அவளையும் பிடிச்சிருக்கணும். கொஞ்சம் அசால்டா இருந்துட்டேன். எனக்கும் எலக்ஷன் வேலை இருந்ததா.. அதனால் கொஞ்சம் வெயிட் பண்னேன். ஆனால் அதுதான் தப்பா போச்சு. நானும் தலைகீழா நின்னு பார்த்திட்டேன். ஸ்ரீயைக் கண்டுபிடிக்க முடியல.” என்று தன் நிலையை விளக்கி பட்டியலிட்டவர் மேலும் சில விபரங்களை வெங்கட்டிற்கு தந்தார். வெங்கட்டும் அவர் பேசுவதை மனதில் அப்படியே ஏற்றிக்கொண்டான்.
  “இப்ப சமீபத்தில் ஒரு கேஸ் பற்றிய விசாரணையில் ஸ்ரீயும் பவித்ராவும் இருக்கும் வீடியோ கிடைத்தது. அது நாலு வருஷத்திற்கு முன்பு பதிவான வீடியோ. ”


  “ மில்லினியனம்’ மாலில் ஒரு ஐஸ்கிரீம் கடையில் பவித்ராவுடன் அந்தப் பொண்ணு ஸ்ரீயும் இருந்திருக்கா.. சி.சி.டிவியில் ரெக்கார்ட் இருக்கு. ஸ்ரீ முகம் தெரியல. ஆனால் எங்ககிட்ட மாட்டினவ முகம் நல்லா கிளியரா இருக்கு. அதை வச்சி கேஸை ஏதாவது நகர்த்த முடியுமான்னு பாருங்களேன். ”
  இடைவிடாது பேசிய கௌன்சிலரை வெங்கட் நிறுத்தி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவன் உள்வாங்கிய செய்தியில் சின்னதாய் ஒரு சந்தேகம் தோன்ற கைகளால் சைகையில் அவரை மறித்து “ஒரே ஒரு கேள்வி.” என்று சொன்னான் வெங்கட்.
  “கேளுங்க வெங்கட். ”
   
  Last edited: May 25, 2019
  Tamilvanitha likes this.
 2. Tamilvanitha

  Tamilvanitha Well-Known Member

  Joined:
  Dec 26, 2017
  Messages:
  476
  Likes Received:
  329
  Trophy Points:
  63
  Gender:
  Female
  nice start
   
  Bala sundar likes this.
 3. Tamilsurabi

  Tamilsurabi Administrator Staff Member

  Joined:
  Sep 11, 2014
  Messages:
  314
  Likes Received:
  215
  Trophy Points:
  43
  முதல் பதிவின் தொடர்ச்சியாக இச்சிறிய பதிவு

  நாளை பெரிதாக வரும்.....

  அந்த வீடியோ நாலு வருஷம் முன்பு பதிவாகியிருந்ததா? ”

  “ஆமாம். ”

  “பவித்ரா இப்ப எங்கே? ”

  “அட்ரஸ் இல்லை” என்றார் கௌன்சிலர் பற்களைக் கடித்துக்கொண்டு.

  “ஸ்ரீயைப் பற்றி ஏதாவது க்ளு? ”

  “எதுவுமே இல்லை.”

  “ஓ! கஷ்டம்தான். அவள் கூட இருந்த பொண்ணு ‘ஸ்ரீ’ க்கு கண்டிப்பா பணம் பற்றி எப்படி தெரியும்? ”

  “அவுங்க இரண்டு பேரும் மாலில் இருந்த தினம்.. பணம் தொலைந்த இரண்டாவது நாள். மேலும் இருவரும் நான்கு மணி நேரம் பேசிக்கிட்டு இருந்திருக்காங்க.. அந்த மால் முழுதும் சுற்றிச் சுற்றி பர்சேஸ் செய்திருக்காங்க.. ”

  “சரி. நைன்டி பர்சன்ட் வாய்ப்பிருக்கு” என்று அவசரமாக பதில் தந்தான் வெங்கட்.

  “ஃபோட்டோ இருந்திருந்தால் நாங்களே இப்போ கஷ்டப்பட தேவையில்லை. ஃபோட்டோ இல்லாதலால இப்ப பிரச்சனை. ”
  “மூன்று வருஷத்திலே நாற்பது எல் செலவாகியிருக்காதா? கிடைக்கப் போகாத பணத்திற்கு எதற்கு செலவு செய்றீங்க? ”
  “இருக்கும்தான். ஆனால் என் பணத்தைக் கை வச்சவங்க தப்புவதா? நோ மிஸ்டர்.. ” என்று அவர் வெங்கட்டின் பெயரை யோசித்தபோது வெங்கட் அவரிடம் “வெங்கட். ” என்று கூறி ஞாபகப்படுத்தினான்.

  “யெஸ்... யெஸ்.. வெங்கட்.. என் பணம் யார் மடியை நிரப்புச்சுன்னு தெரியணும். எதிர் கோஷ்டியா? இல்லை பிளாட்பாரம் ஆளுங்களான்னு தெரியணும். அந்த பொண்ணு ஸ்ரீயை கண்டுபிடிக்கணும்.. ” என்று ஸ்ரீயைப் பற்றி பேசும் போது மட்டும் அவர் கண்கள் இரத்தமாகச் சிவந்ததை வெங்கட் கவனித்தான்.

  “அப்படியா?உங்கள் பணம் உங்ககிட்ட வருகிறதோ இல்லையோ கண்டிப்பா அக்கூயூஸ்ட் என் கஸ்டடியில்தான் இருக்கணும். கண்டிஷனுக்கு ஓகேயா? நான் பொண்ணுங்க விஷயத்தில் ரொம்ப கவனமாக இருப்பேன். கன்னியமாகவும். உங்களிடமும் அதை எதிர்பார்க்கிறேன் சார். உங்களுக்குத்தான் பணம் யார் மடியை நிரப்புச்சுன்னு தெரிந்திடுதே? அப்புறம் என்ன பிரச்சனை?

  “சரி. ஆனா எதிர் கோஷ்டியாக இருந்தால்? என் கையில விட்டுடணும். பதிலுக்கு பதில் இவன் தருவான்டான்னு அவனுங்களுக்கு தெரியணும். என் இனம் அவனுடையதுக்கு சளைத்தது இல்லை என்று அவனுக்குப் புரியணும். ஸ்ரீயிடம் எனக்கு பத்து நிமிஷம் போதும். பழைய கணக்கு தீர்க்கணும். ”
  மேலும் வெங்கட் அவசரமாக பதில் தந்தான் “இந்த கேஸை நான் சால்வ் பண்றேன்.

  எனக்கு உங்களால் ஒரு ஃபேவர் ஆகணும். ”
  “சொல்லுங்க வெங்கட். ”

  “கேஸ் முடிந்தபிறகு எனக்கு கால் பண்ணக்கூடாது. வேற கேஸ் எதுவும் நான் எடுக்கமாட்டேன். உங்க ஆளுங்க கேஸ் வேற எதுவும் நான் எடுக்கமாட்டேன். நம்ம மூன்று பேர் தவிர இந்த ப்ராசஸ் யாருக்கும் தெரியக்கூடாது. கிளியர்? ”

  “ம்.. ம்.. ”

  “மூன்று பேர் தவிர யாருக்கும் தெரியக்கூடாது. மீண்டும் கான்டாக்ட் பண்ணக்கூடாது. இதிலே காம்ப்ரமைஸ் பண்ணமாட்டேன். ”

  “சரி.. சரி…”

  “வீடியோ ஃபூட்டேஜ் தாங்க. என் சார்ஜ் ஒரு எல். இன்றே கிரடிட் ஆகணும். நான் கிளம்பட்டுமா? ”

  “ஓகே’’

  தொடரும்....
   
  dharshini likes this.
 4. kannamma 20

  kannamma 20 Well-Known Member

  Joined:
  May 14, 2017
  Messages:
  498
  Likes Received:
  373
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Nice start
   
  Bala sundar likes this.
 5. dharshini

  dharshini Well-Known Member

  Joined:
  Oct 10, 2017
  Messages:
  382
  Likes Received:
  293
  Trophy Points:
  63
  Gender:
  Female
 6. Bala sundar

  Bala sundar Member

  Joined:
  Feb 15, 2019
  Messages:
  57
  Likes Received:
  61
  Trophy Points:
  18
  Gender:
  Female
  எபி 3
  ஷ் இது வேடந்தாங்கல்

  பாலா சுந்தர்  சார். உங்களை மீட் பண்ணதுல ரொம்ப திருப்தி. உங்க ரிலேடிவ் ராகுல் டி.ஐ.ஜி எனக்கு ரொம்ப க்ளோஸ். கேஸைப் பற்றிய கவலை இனி எனக்கு இல்லை வெங்கட். ”


  “எனக்குத் தேவையான விபரங்களை பிறகு உங்களுக்கு வாட்ஸ் ஆப் பண்றேன். என் நம்பர் உங்களுக்கு தெரியும் தானே? உங்களை எந்த நம்பரில் கான்டாக்ட் பண்ணணும்கிறதை எனக்கு வாட்ஸ் ஆப் பண்ணுங்க. ”


  வெங்கட் தன் வேலை முடிந்ததால்.. தனது அலுவலக ஜீப்பில் கிளம்பினான். பவித்ராவும் ஸ்ரீயும் அவன் நினைவுகளை நிரப்பினர். நாலு வருஷம் கிடைக்காத பொண்ணு என்னிடமா கிடைக்கப் போகிறாள்? முடிந்தவரை முயற்சி செய்யலாம் முடியவில்லை என்றால் அவன் பாடு என்று நினைத்துக் கொண்டே காரை ஓட்டினான். கார் வேகமாக அவன் ப்ளாட்டிற்குள் நுழைந்தது. அதிமாக மிடில் கிளாஸ் மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதி.
  தனது ப்ளாட்டில் ஹெச்--பி-ஓ வில் ‘அக்லி ட்ரூத்’ திரைப்படத்தை பார்த்துக் கொண்டே வெங்கட் தனது கைபேசியில் மில்லியனம் மால் வீடியோவைப் பார்த்தான். ‘அக்லி ட்ரூத்’ திரைப்படத்தின் இறுதிக்காட்சி தொலைக்காட்சியில் அழகாக காட்சியாக விரிந்தது.


  படத்தில் இறுதிக்காட்சியான அழகான முத்தக் காட்சியை கண் இமைக்காமல் பார்த்தவன் ‘ஹீரோயின் கண்களில் 6mm காலிபர் பிஸ்டல்’ இருக்குது. பின்னே படம் பாக்ஸ் ஆஃபீசில் தூள் கிளப்பாதா என்ன? தியேட்டரில் பிய்ச்சிக்கிட்டு போகாதா என்ன? என்று தன்னிடமே கேட்டுக்கொண்டான். கௌன்சிலர் பி.ஏ அனுப்பின வீடியோவை கைபேசியில் ஓடவிட்டான்.


  மீண்டும் படத்தின் முத்தக்காட்சி அவன் கண்களை இங்கே பார் என்று அழைத்தது. பார்த்தவன் மீண்டும் தன்னிடம் சொல்லிக்கொண்டான் ‘இந்த சீன் பார்த்தவனெல்லாம் இன்று நைட் தூங்கிடுவானா? மற்றவன் பாடுயிருக்கட்டும் முதலில் நம்ம தூக்கம் போச்சு!’ என்று அவன் நினைக்கையில் செல்பேசி சிணுங்கியது.


  அந்த கௌன்சிலர் அனுப்பிய காணொளி பிரகாசமாய் அவனது கைபேசியில் இரைச்சல் ஒலியுடன் ஒளி வீசியது. செல் ஃபோன் காணொளி அவனது முழு கவனத்தையும் இழுத்தது. அந்த காணொளியில் இரண்டு பெண்கள் ஐஸ் கிரீம் கடையில் சுமார் இரண்டு மணி நேரம் பேசுகிறார்கள். ஐஸ்கிரீம் கடையில் பேசி முடிந்ததும் இரண்டு பெண்களும் ஒரு டிசைனர் டிரஸ் கடையில் நுழைகிறார்கள்.


  பவித்ரா என்று கௌன்சிலர் பி.ஏ மூலமாக அடையாளம் காட்டப்பட்டவள் மற்றவளுக்கு பத்து நெக்லஸ் கழுத்தில் வைத்துப் பார்க்கிறாள். இருவர் முகமும் தெளிவாக இல்லை. பின்னே ஒன்றும் வாங்காமல் அடுத்த கடைக்குப் போகிறார்கள். அது சிறுவர்களுக்கான கடை. அங்கே ஒரு பார்பி பொம்மை வாங்குகிறாள் பவித்ரா. அவர்கள் சென்ற மற்ற கடைகளில் நுழைவாயிலில்தான் சி.சி.டி.வி இருந்தது. அதனால் உள்ளே நடந்தது தெரியவில்லை.
  நான்கு மணி நேரம் கடந்த பிறகு வெளியே ஆட்டோவில் பவித்ரா தனியாக ஏறுகிறாள். அவள் தோழி (ஸ்ரீ) ஒரு பைக்கில் செல்கிறாள். பைக் நம்பர் தெளிவாக இல்லை. அவள் முகமும் கொஞ்சமும் தெளிவாக இல்லை. அந்த பைக்காரன் முகத்திலோ ஹெல்மெட். வெறுப்படைந்த வெங்க்ட செல்போனை தலையணை மீது விசிறி விட்டு கணகளை மூடினான்.


  மறுநாள் குளித்துவிட்டு உடை மாற்றுவதற்குள் அவன் கைபேசிக்கு பத்து அழைப்புகள் வந்திருந்தன. ‘ஆகா பத்தா?’

  என்று மனதில் நினைத்தவன் வந்த அழைப்புகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு பிஸ்டலை அதன் உறையில் சொருகி தோள்பட்டை பேட்ஜை சரிசெய்துவிட்டு தனது ஜீப்பின் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்புவதற்கு எத்தனித்தான்.
  தனது அலுவலகம் வந்து சேர்ந்தபோது அவன் கைக்கடிகாரம் மணி எட்டு என்று காண்பித்தது. அவன் உள்ளே நுழைந்ததும் ஏ.எஸ்.ஐ கோபிநாத் அவனிடம் நேராக வந்தார். வந்தவர் தனது நேரத்தை வீணாக்காமல் வெங்கட்டிடம் மட மடவென்று பேச ஆரம்பித்தார்

  “கௌன்சிலர் பேசினார் வெங்கட். பவித்ரா கேஸ் பற்றிய எல்லா விபரமும் உன்னிடம் தரச்சொன்னார். இந்தாப்பா இந்த ஃபைல்ல இருக்கு. ஆர் யு பாசிடிவ்? இந்த கேஸை சால்வ் பண்ண முடியும்னு நினைக்கிறியா? ”


  வெங்கட் அவர் கேள்விக்கு பதிலாக சிரித்தான். ‘ஆம்’ என்ற அர்த்தம் பொதிந்திருந்த சிரிப்பு. ஏ.எஸ்.ஐ கோபிநாத் வேறேதும் கேட்காமல் “அப்படினா வா என்னுடன். ஒரு காஃபியுடன் பேசுவோம். ” என்றார்.


  காஃபி ஷாப்பில் கோபிநாத் சொன்னார் “பவித்ரா கேஸை ஏ.எஸ்.ஐ ராஜன் தான் டீல் பண்ணான். என் கூட ஒண்ணா டிரைனிங் இருந்தவன் தான். நல்ல பையன். பவித்ரா கேஸால் அவனுக்கு நிறைய பிரச்சனை. டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு கிளம்பிட்டான். இப்ப அவன் லைஃப்ல நல்லா செட்டில் ஆகிட்டான். ஒரு பெண் குழந்தை இருக்கு. ”

  “ ‘ராஜன்’ அவருக்கு என்ன பிரச்சனை? ”

  “ராஜன் அந்த பொண்ணு ஸ்ரீயோடு ஏதோ கனக்ட் ஆகிட்டான். அதான் வினையே. ஸ்ரீ எஸ்கேப் ஆகிடுச்சு. அதான் பிரச்சனை. கிடைச்ச அக்கூயூஸ்டை கோட்டைவிட்டதால் ரிசைன் பண்ணும் நிலை வந்திடுச்சி. அந்த பொண்ணு முக ராசி அப்படி. பசங்க விழுந்திடுறாங்க வெங்கட். போலீஸ்காரங்ககூட விழுந்திடுறாங்கப்பா.”


  “கல்கியின் பொன்னியின் செல்வன் வாசித்திருக்கிறியா? அதுல நந்தினி தேவின்னு ஒரு கேரக்டர் வரும். ஸ்ரீயும் அது போலதான். ராஜன் நந்தினிகிட்டயிருந்து தப்பிச்சிட்டான். ஒரு போலிஸ்காரனை தேற்றவே ஒரு மாதம் ஆகிடுச்சு. ராஜனைத்தான் சொல்றேன். யாராவது பிரச்சனையைத் தேடிப் போவாங்களா? ”


  ஏ.எஸ்.ஐ கோபிநாத் வாயை மூடிக்கொண்டே இருந்திருக்கலாம். ‘அக்லி ட்ரூத்’ படத்தின் லிப் லாக் காட்சியை விழுந்து விழுந்து ரசித்தவன் நந்தினி தேவி என்று வர்ணித்த பெண்ணை விடுவானா? அழகை தள்ளி நின்றே ரசிக்கும் நம்ம வெங்கட் விடுவானா? ரோஜா பூப்பது பார்த்துப் பார்த்து ரசிக்கவே பறிப்பதற்கில்லை என்று நம்பும் நம்ம வெங்கட் ஸ்ரீயை பார்க்காமல் விடுவானா? கரும்பைக் கடிக்காதே உன் பல் உடையப் போகுது என்று சொல்வது போல இருந்தது வெங்கட்டிற்கு.


  ஆனால் இப்போது அதைவிட மற்றொரு விஷயம் அவனுக்குத் தெரிய வேண்டியிருந்தது. அதனால் தனது கேள்விகளை பட்டென்று கேட்டான் “ராஜனுக்கும் ஸ்ரீக்கும்?.. ”


  வெங்கட் கேட்க நினைப்பதை புரிந்துகொண்டு சொன்னான் “ஆமாம் வெங்கட். இருவருக்கும் அஃபேர் இருந்தது. ஏட்டையா சொல்லித்தான் எனக்கே தெரியும். கௌன்சிலர் ஆளுங்களிடம் அவன் மாட்டிக்காம இருக்க டிபார்ட்மன்ட்தான் ஹெல்ப் பண்ணுச்சு. அந்த பொண்ணு கௌன்சிலர் ஆளுங்களுக்கு பயந்து ராஜனிடம் இருந்து எஸ் ஆகிடுச்சு. ஆளை பிறகு கண்டேபிடிக்க முடியல. அக்கூயூஸ்டை கோட்டை விட்டதுக்காக டி.எஸ்.பி ராஜனை டிரான்ஸ்பர் செய்துட்டார்.
  கேஸிலிருந்து வெளியே வருவதற்குள் அவனுக்கு போதும் போதும் என்றானது. ”


  “நீ கூடவா ஸ்ரீயைப் பார்த்ததில்லை? சும்மா கதை விடாத.. கோபி. ”

  “நிஜம் வெங்கட். ஏட்டையா தான் பார்த்திருக்கார். அவர் தான் எங்களிடம் ஸ்ரீயை பற்றிச் சொன்னதே. . ”

  “எந்த ஏட்டையா?”

  “நம்ம காமராஜர். மறந்திட்டியா? மகளிர் காவல் நிலையத்தில் பத்மான்னு ஒரு எஸ்.ஐ இருப்பாங்களே.. ப்ரஸ்காரனுங்க தலையில வச்சி கொண்டாடுவாங்களே? அவுங்க அப்பா தான்.. ஸ்ரீ கேஸை ராஜனும் அவுங்களும் தான் டீல் பண்ணாங்க. ”


  “சென்னைக்குப் போய் பத்து வருஷம் ஆச்சுல்ல. அதான் மறந்திடுச்சு. மதுரை இப்பதான் செட்ஆகுது.. இப்ப ஞாபகம் வந்திடுச்சு. பத்மா மேடம் பார்க்கணுமே.. ஏட்டையா நம்பர் கொடு. ”


  “ஏட்டையா போன வருடம் தவறிட்டார். பத்மா இப்ப கம்ப்ளீட் ரெஸ்டில் இருக்காங்க வெங்கட். அவுங்களுக்கு சிவியர் ஹார்ட் அட்டாக். ஒரு மாதம் முன்புதான் அட்டாக் வந்தது. ரெசிக்னேஷன்கூட கன்பர்ம் ஆகிடுச்சு. ”


  “இந்த கேஸ_க்கு டெட் என்ட்னு பெயர் வை. எங்கிட்டு திரும்பினாலும் முட்டுது.” என்று கடுப்பில் கூறினான் வெங்கட்.
  காஃபிக்கு பில் கொடுத்துவிட்டு இருவரும் காவல் நிலையத்திற்குள் சென்றனர்.


  வெங்கட் தனது குறிப்பேடில் ராஜனுடைய விலாசத்தை குறித்துக் கொண்டான். வெங்கட் தனது ஜீப்பில் கிளம்பியதும்… ஏ.எஸ்.ஐ தனது செல்பேசியை எடுத்து பத்து எண்களை அழுத்தி அழைப்பு பட்டனை அழுத்தினார். எதிர்முனையில் பேச்சு குரல் கேட்டது.


  “சார் சொல்லுங்க. நான்தான் மசூத் பேசுறேன்.”


  “மசூத் ஸ்ரீயை பத்திரமா பார்த்துக்கோ. கேஸ் வெங்கட் கைக்கு போயிருச்சு. ஜாக்கிரதை. ஸ்ரீயுடன் பேசணும். ஃபோனை கொடு. ”

  மறுமுனையில் பெண் குரல்.. “கோபி சார் அவருக்கு எதுவும் பிரச்சனை வருமா? ”


  “ஸ்ரீ.. பயப்படாதேமா.. உன் புருஷனுக்கு எதுவும் ஆகாது. நாங்க இருக்கோம்ல? விட்டிடுவோமா? குட் நியுஸ் சொன்னான் உன் புருஷன். உன் பெரிய பொண்ணு வரப்போகும் குட்டித் தம்பியைப் பற்றிதான் ஒரே பேச்சாமே? உன் வீட்டுக்காரன் தான் சொன்னான். டாக்டர்கிட்ட செக்கப்பிற்கு சரியா போகணும். பழையதை நினைக்க கூடாது சரியா? மசூத்கிட்ட ஃபோனைக் கொடு. ”
  “சரிங்க சார். உங்க வைஃப் நல்லாயிருக்காங்களா? ”


  “நல்லாயிருக்காம்மா.. மசூத்கிட்ட கொடும்மா.. ”

  “ம். ஃபோனை அவர்கிட்ட தர்றேன்... ”


  மசூத் கைபேசியை வாங்கி பேச ஆரம்பித்தான்.. கோபி கவலைப்பட வேண்டாம். என்னை எத்தனை வருஷம் உனக்குத் தெரியும்.. பிறகு ஏன் கவலைப்படுறீங்க. என்கூட ஸ்ரீ இருக்கும்போது யார் அவள்கிட்ட நெருங்க முடியும்? நான் ஸ்ரீயை பார்த்துக்கிறேன். ”


  “ம். கவனம். இது வெங்கட் கேஸ். அதான் திரும்பத் திரும்ப சொல்றேன்.” என்று கோபி எச்சரிக்கை செய்தான்.
  பழையதை நினைக்காதே என்று ஏ.எஸ்.ஐ கோபிநாத் கூறினாலும் அடங்காத கொஞ்சமும் அடங்காத ஸ்ரீ மனம் பழையதை நினைக்கத் தொடங்கியது.
  அவளிடம் “ஏய் உனக்கு ஒரு நாளுக்கு எவ்வளவு?” என்று ராஜன் கேட்டுவிட்டு அவள் கைகளைப் பிடித்ததை அருகில் நின்ற ஏட்டையா சங்கடமாக முகம் சுளித்ததை அவள் உயிர் உள்ளவரை அவளால் மறக்க முடியமா? ராஜனை மனம் நிறைய நிரப்பிக்கொண்டு பிரிந்த காரணத்தைதான் மறக்க முடியுமா?


  இல்லை பவித்ரா அவளைவிட்டு காணாமல் போனபிறகு அருகில் கண்களில் படும் அனைத்து ஆண்களையும் பற்களால் கடித்து குதறிட துடித்த அந்த கொடிய நாட்களும்தான் ‘மறந்துபோ’ என்றதும் அது தாயின் கருவறை மாதங்களாகிடுமா?


  நான்கு வருடம் முன்பாக அவளை கொன்று வதைத்த நினைவுகள் நேற்றுதான் நடந்ததுபோல அவள் முன்பு சின்னஞ்சிறு குழந்தை முன்பாக கத்திகொண்டு மிரட்டும் ஈவு இரக்கமற்ற திருடன் போல மிரட்டியது.
   
 7. Bala sundar

  Bala sundar Member

  Joined:
  Feb 15, 2019
  Messages:
  57
  Likes Received:
  61
  Trophy Points:
  18
  Gender:
  Female
  Episode 4

  பாலா சுந்தர்


  ஷ் இது வேடந்தாங்கல்..


  நான்கு வருடங்களுக்கு முன்பாக…


  ஸ்ரீ. . . . .


  பணம். . .


  பத்து ரூபாய் தாளுக்கு எவ்வளவு மவுசு? பத்து ரூபாய் கிடைக்கும் என்றால் ஒருவன் ஒரு சின்ன பொய் சொல்ல வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள்…

  அவனுக்கு அந்த பத்து ரூபாய் தேவையில்லாமல் இருந்தால்கூட ஒரே ஒரு சின்ன பொய்தானே? சொல்லிவிடுவான். ஐம்பது ரூபாய் தாளுக்கு எவ்வளவு மவுசு? ஐம்பது ரூபாய் கிடைக்கும் என்றால்? சும்மா ஒரு ஏழெட்டு பொய் சொன்னால்.. ஐம்பது ரூபாய் கிடைக்கும் என்றால்? அந்த ஐம்பது ரூபாய் அவனுக்குத் தேவையில்லாமல் இருந்தால்கூட ஏழெட்டு பொய்தானே?
  சொல்லி விடுவான்.  ஆனால் அந்த பத்தும் ஐம்பதும் மிகத் தேவை என அலைந்து திரிபவன் முன்னால் ஐநூறு ரூபாய் நீட்டினால்? ஒன்றென்ன? ஏழென்ன? டின் டின்னாக வண்டி வண்டியாக பொய் சொல்வான். அவனுக்குத் தெரியாது ஐநூறு ரூபாய் சம்பாதிக்க ஆயிரம் நல்வழிகள் உண்டு என்று அவனுக்குத் தெரியாது.
  அரை மணிநேரத்தில் பத்து பக்கம் டைப் செய்து ஐநூறு எண்ணலாம். இல்லை இருக்கவே இருக்கு ஒவ்வொரு தெருவிலும் ஒரு பாஸ்ட்புட் கடை. அதில் வெங்காயம் வெட்டிக்கொடுத்தாவது ஐநூறு பைக்குள் திணிக்கலாம். ஒரு வாசல் மூடினால் மறு வாசல் திறக்கும். பல வாசல் தேடிப் போக தெம்பும் துணிவும் தான் தேவை.
  இதை போதிக்கத் தெரியாத துஷ்டர்கள் அவனிடம் இது மோசமான உலகமடா. இந்த வேலையில் காசு தேருமா?
  ‘ஐஞ்சுக்கும் பத்துக்கும் நானே லாட்டிரி அடிக்கிறேன். வேலை வேணும்மா? போப்பா.’ என்று துஷ்டர்கள் அவன் அவன்மீது வைத்த நம்பிக்கையையே பிடுங்கிப் போடுவார்கள்.  அவன் பயந்தே போவான். அவன் அவள் என்றால்? அதாவது அது ஒரு பெண்ணாக இருந்தால்? அழகாக இருந்தால்? அவளுக்கு வழிகாட்டும் விரல்கள் நிச்சயம் கோணலான அஷ்டகோணலான வழிகள் நிறைய காட்டிடும். அழகான சத்தான புளிப்பைவிட அழுக்கான இனிப்புதானே நாவு கேட்கிறது?


  சத்துமிக்க நெல்லிக்காயைவிட அழுக்கான சர்க்கரையை வாரி வழங்கும் கரும்பைத் தானே நாவு கேட்கிறது? அவள் தடம் புரள நிறைய வாய்ப்புண்டு. அப்படி தடம் புரண்டு ஒரு ஏமாற்றுக்காரனால் ஏமாற்றப்பட்டு ஒரே ஒரு பெண் பிள்ளை பெற்றவள் ஸ்ரீயின் தாயார். அந்த தாயார் தனது மகள் ஸ்ரீக்கும் அதே அஷ்டகோணலான பாதையையே காண்பித்துவிட்டாள்.  குப்பன் வேசியின் வீட்டிற்குப் போனாலும் அவன் குப்பன் தான். அவன் பெயர் மாறுவதில்லை. சுப்பன் வேசியின் வீட்டிற்குப் போனாலும் அவன் சுப்பன் தான். அவன் பெயர் மாறுவதில்லை. (பல வேசிகளைப் பார்த்தாலும் அவன் பெயர் மாறுவதில்லை.)
  அந்தோ பரிதாபம். அந்த பெண் பெயர் தான் தொலைந்து ‘வேசி’ ‘அயிட்டம்’ என்றாகிவிடுது. அவளுக்கும் தேவைதான்.

  மூளையைக் கடன் கொடுத்தவளுக்குத் தேவைதான். ஆம்! தன்மானம் தொலைத்தவள் அடையாளம் இழக்க வேண்டியதுதான்.


  ஸ்ரீ தனது தவறை தவறு என்று உணராது வாழ்ந்த நாட்களில் பவித்ராவே அவள் ‘தோழி’ ‘உடன்பிறவா தமக்கை’ ‘ரகசிய டைரி’ மனதின் எண்ண ஓட்டங்களைக் கணிக்கும் ‘ஜோதிடன்’!


  ஒரு அழகிய திங்களில் இருவரும் பேசிக்கொண்டனர். ஸ்ரீயும் பவித்ராவும் பேசிக்கொண்டனர்.
  “பவி இந்த துளசிச் செடி தளிர்க்கவே மாட்டிக்குது. பேசாமல் மருதாணி செடியை அதன் இடத்தில் வைப்போமா? ”
  “ஹ_ம் ஹ_ம் போப்பா! துளசி மாலை கட்டித் தான்னு உன் அம்மா எப்ப பாரு கேட்டுக்கிட்டே இருக்காங்க. அவுங்களுக்கும் துளசி மாலை பிடிக்குமாம். சாமிக்கு போடணுமாம். எனக்கும் துளசி வாசனை ரொம்ப பிடிக்கும். செப்டம்பர் மழையில் எப்படி தளிர்க்குதுன்னு பார். புதர் போல தளிர்க்கப் போகுது. நம்மால் அதை பறித்து பூமாலை கட்டி மீள முடியாது. நீ தான் அந்த மாலையைக் கட்டப்போற பார் ஸ்ரீ. உன் கட்டுதான் நெருக்கமாக இருக்கும். உன்னை சரம் சரமாக கட்ட வைத்து நான் படுத்துக்கிட்டே வேடிக்கை பார்ப்பேனே! ”


  “ஓ! கட்டிடலாம் பவி. பூமாலை கட்டத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்குமே.. நீ படுத்துக்கிட்டே வேடிக்கை பாரு. பவி உன்கிட்ட ஒண்ணு கேட்கணுமே.. ” என்று சொன்னவள் கேள்வி எதுவும் கேட்காமலே அமைதியாக இருந்தாள். கேட்பதற்கே தயங்கித் தயங்கி நின்ற ஸ்ரீ பவித்ராவிடம் ஒருவழியாக கேட்டேவிட்டாள்.


  “பவித்ரா இங்க வாயேன். ஒரு ஐநூறு ரூபாய் இருக்குமா? ”
  “இருக்கும் ஸ்ரீ. எதுக்கு கேக்கிற? ”
  “ஒண்ணுமில்லை. இந்த மினரல் வாட்டர்காரனுக்கு கொடுக்கணும். பத்து நாளாக கேட்கிறான் பவித்ரா. ”
  தனது கைப்பையிலிருந்து ஐநூறு ரூபாய் தந்தவள். ஸ்ரீயிடம் மேலும் பேச்சுக்கொடுத்தாள்.


  “ஏன் ஸ்ரீ உனக்கு இந்த வாரம் கஸ்டமரே இல்லையா? ”


  “அதெல்லாம் இருந்தது பவித்ரா. மோகனா அக்கா காஸ் சிலின்டர் வந்திருக்குன்னு ரூபாய் கேட்டாங்க. நானும் அவங்களுக்கு கொடுத்தேன். அதான் என் பணம் செலவாகிடுச்சு. அவுங்களோட பையன் பிரித்விக்கு பீஸ் கட்டணும் என்று சொன்னாங்கப்பா. எப்படி பீஸ் கட்டப் போறாங்களோ? ”


  ஸ்ரீயின் பதிலைக் கேட்ட பவித்ரா அவள் கைகளைப் பற்றிச் சொன்னாள் “ஸ்ரீ மற்றவங்க பாரத்தை நாம சுமக்க முடியாது. அவனவன் பசிக்கு அவன்தான் சம்பாதிக்கணும். முதலில் நீ அநியாயத்திற்கு இரக்கப்படுவதை விடுப்பா. ”
  இதை எதிர்ப்பார்த்த ஸ்ரீ சிரித்துக்கொண்டே பவித்ராவின் முதுகு பக்கமாக நகர்ந்து அவளது கழுத்தைக் கட்டிக்கொண்டு அவள் காதுகளை கடித்துவிட்டு “எனக்கு இப்ப பசிக்குது என் குழம்பு எப்படி இருக்குன்னு சொல்லு. உனக்குதான் கொண்டு வந்தேன். சொல்லப்போறியா? இல்லையா? இல்லை நானே மார்க் போட்டுக்கிறேன். ”


  “இல்லை இல்லை. என்கிட்ட கொடு நான் புட்டு புட்டு வைக்கிறேன். பேச்சை மாத்துற? சரி சரி வா சாப்பிடலாம். ”
  இருவரும் ஆளுக்கு ஒரு தட்டில் சாப்பாட்டை போட்டுக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தனர். அப்போது பவித்ரா சாப்பிடும்போது அவள் உதடுகளில் ஒரு சாரல் புன்னகை. முகத்தை குளிர்ச்சியாக காண்பித்த சாரல் புன்னகை. ஸ்ரீ ‘ஏன் சிரிக்கிற? ’ என்று புருவங்கள் வாயிலாக பவித்ராவிடம் கேள்வி கேட்டாள்.
  பதில் கூற நினைத்த பவித்ரா சிரிப்பை விடாது பதில் கூறினாள் “இல்லை ஸ்ரீ அந்த ஹேம்நாத் மோகனாகிட்ட சரியா திட்டு வாங்கினான். உன்னை கல்யாணம் செய்துக்கிறானாம். கல்யாணத்துக்கு பிறகு குடும்பம் குழந்தைன்னு நீ நிம்மதியாக இருக்கலாமாம். போன வருஷம் என்கிட்ட அதே புலம்பல். இந்த வருஷம் உன்கிட்ட ஆரம்பிச்சிருக்கு. ”


  “ஏய் பவித்ரா நிஜமாகவா சொல்ற? என்னை ரூட்விடுவது எனக்குத் தெரியும். உன்கிட்ட நெருங்குச்சா? எனக்குத் தெரியாதே. நீ பேசாமல் அவனை கட்டிக்கிட்ருக்கலாமே. ஒரு குழந்தை பொறந்திட்டா அது நிச்சயம் உன் காலிலே கிடக்கும்டி. ”


  “போப்பா ஏழுமணிக்கு திறக்கும் டாஸ்மாக் கடையை கெட்ட வார்த்தையில் வைதிட்டு ஆறு மணிக்குத் திறக்கும் டாஸ்மாக் கடைக்கு போகுதே.. அதையா மாற்ற முடியும்? எனக்கு நம்பிக்கையில்லைப்பா . பலசரக்கு கடையில் மசூதும் உன்னிடம் காலையில தனியே பேசிகிட்டிருந்தான் என்ன விஷயம்?” என்று மசூத் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவலில் பவித்ரா ஸ்ரீயிடம் கேட்டாள்.
  மசூத் எதிர்வீட்டுக்காரன். டெய்லர் கடையில் வேலை பார்க்கிறான். நல்ல பையன்தான். ஸ்ரீயின் மீது அளவில்லா நேசம் கொண்டவன்தான்.
  அம்சமானவன்தான். குடிதான் கொஞ்சம் உண்டு..

  பவித்ராவின் கேள்விக்கு ஸ்ரீயே பதில் சொன்னாள் “ஹேம்நாத் டயலாக்தான். ஆனால் மசூத் நிஜமாகவே கல்யாணத்தை சீரியசாக விரும்புகிறான் பவி. எனக்கும் அவனை பிடிச்சிருக்கு. ஆளும் நல்லாதான் இருக்கான். பசங்க பாஷையில் சொன்னால் செம கட்டைதான். பேசாமல் கல்யாணம் செய்துக்கலாமா என்றுகூட தோணுது. வேலைக்கெல்லாம் ஒழுங்காக போகுமான்னு தான் தெரியல. என் அம்மா மாதிரி ஏமாந்திடக்கூடாதுல்ல? அதான் ஒரு வருஷம் போகட்டும் என்று சொல்லியனுப்பிட்டேன். நான் திரும்ப தொழிலுக்கு வந்திடக்கூடாதுடா. கல்யாணம் ஆகிட்டா ஒதுங்கிடணும். புள்ளைகளை நல்லா படிக்க வைக்கணும். ”


  ஸ்ரீ சொல்லிக் கொண்டே போகப் போக பவி டைரியில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தாள். ஸ்ரீ இதை கவனித்துவிட்டு “ஏய் நான் பேச பேச அதை அப்படியே எழுதுறியா? ஏன்? ”


  “ஏன்னா? ஒரு பத்து வருஷம் கழித்து நீயும் நானும் இதை வாசித்துப்பார்த்து சிரிக்கணும்ல்ல? அதான். ”
  “ஏய் அதை கொடு. நான் மசூதை சைட் அடிச்சதை சொல்லிட்டேனே? நீ யாரையும் சைட் அடிச்சதே இல்லையா? கொடு என்கிட்ட. கொடுப்பா.. தெரியாம மசூத்தை சைட் அடிச்சதை சொல்லிட்டேன். ”
  அந்த அறை முழுதும் பவித்ரா பின்னே ஓடினாள் ஸ்ரீ. ஆனால் பவித்ரா கைகளிலிருந்து டைரியை வாங்க முடியாமல் ஸ்ரீ மூச்சு வாங்கி சோபாவில் பொத்தென விழுந்ததுதான் மிச்சம். சிறிது நேரத்தில் பவித்ராவும் சோபாவில் பொத்தென விழ. . தோழிகள் இருவரும் சிரித்து சிரித்து லந்தடித்தனர்.


  இருவரின் சிரிப்பையும் நிறுத்தியது ஸ்ரீயின் கைபேசி.
  ஹேம்நாத் தான் அழைத்தது. ஸ்ரீ கைபேசியை எடுக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்தவாறே அழைப்பை ஏற்றாள் ஸ்ரீ.


  “ஸ்ரீ ஒரு நல்ல கிராக்கி. நீ தான் வேணும். அப்பதான் பார்ட்டியை ஆல்டைம் நம்மகிட்ட வச்சுக்க முடியும். மகாபலிபுராம் போகணும். ஒரு நைட்டுக்கு பத்தாயிரம் தருவான். என்ன சொல்ற? ”
   
  Kavyakeerthi and Tamilvanitha like this.
 8. Kavyakeerthi

  Kavyakeerthi Active Member

  Joined:
  Oct 15, 2018
  Messages:
  177
  Likes Received:
  120
  Trophy Points:
  43
  Nice update
   
 9. Bala sundar

  Bala sundar Member

  Joined:
  Feb 15, 2019
  Messages:
  57
  Likes Received:
  61
  Trophy Points:
  18
  Gender:
  Female
  Episode 5

  “என்ன ஹேம்நாத்? மணி என்ன தெரியுமா? ஆறுதான் ஆகுது. வீட்டுக்கு வந்து ஒரு மணி நேரம்தான் ஆகுது. நாங்க இப்பதான் மதிய சாப்பாடே சாப்பிடப்போறோம். சாப்பிட்டதும் கால் பண்றேன். ”  ஸ்ரீ கோபமாக கைபேசியை அணைக்கவும் பவித்ரா ஸ்ரீயிடம் கேட்டாள்
  “என்ன ஸ்ரீ?”

  “ஒரு நைட்டுக்கு பத்தாயிரம். எவனோ தருவானாம். என்னைக் கூப்பிடுது. ”

  “கட் பண்ணிட்டியா? ஏன்? ”

  “பவி புது ஆளுங்களை நம்பி மகாபலிபுரம் வரை போறது சரியாகப் படலை. வேணாம். நான் வரவில்லை என்று ஃபைனலாக சொல்லப் போறேன். நீயும் மாட்டேன் என்று சொல்லிடு. ”

  “ஸ்ரீ எனக்கு ரொம்ப நாளாக ஒரு டச் ஃபோன் வாங்கணும் என்ற ஆசை இருக்குப்பா. ஏழாயிரம் ரூபாய் ஆகுதுப்பா. ”

  “அதெல்லாம் தேவையில்லை. இருக்கிற ஃபோன். போதும். ”

  “இல்லை. நான் கேட்க மாட்டேன். எனக்கு வேணும்ன்னா வேணும்தான். என் ஃபோனில் ஃபோட்டோ எடுத்தால் எல்லோரும் கருவண்டு கலர்ல்ல தெரியிறோம். கண் மட்டும் ஆடு மாடு கண் போல ரேடியம் கலர்ல்ல தெரியுது. எனக்கு டச் ஃபோன் நல்ல கேமிராவுடன் வேணும்” என்று பவித்ரா கோபமாகக் கூறி முடித்ததும் ஸ்ரீ அவளிடம் பொறுமையாகக் கூறினாள்
  “நான் வாங்கித் தர்றேன் பவி. நிச்சியமாக. என்னை நம்பு. ”
  “ஸ்ரீ உன் பர்ஸே காலி என்று எனக்குத் தெரியும். கிடைக்கிற சான்ஸை விடச்சொல்றியா? போப்பா.” என்று பதில் கூறிக்கொண்டே தனது கைபேசியை எடுத்து ஹேம்நாத் எண்ணிற்கு கால் செய்தாள். முதல் ரிங்கிலேயே ஹேம்நாத் கைபேசியின் அழைப்பிற்கு பதில் தந்தான்.


  “ஹலோ பவித்ரா. ஸ்ரீ சொன்னாளா? நல்ல பார்ட்டியை வேண்டாம் என்று சொல்றாளே?”
  “ஸ்ரீ தான் வரணுமா? நான் வரக்கூடாதா? ”
  பதில் கூறாமல் ஹேம்நாத் இரண்டு நிமிடங்கள் தாமதித்தான். இரண்டு நிமிடங்கள் கடந்த பிறகு சொன்னான் “ஸ்ரீ வந்தால் பார்ட்டி கையை விட்டுப்போகாதே என்று நினைத்தேன். சரி இப்ப கிடைக்கும் பைசா பற்றி யோசிப்போம். நீ இன்னும் பத்து நிமிஷத்தில் ரெடியாகிடு. நான் வந்து உன்னை கூட்டிட்டுபோறேன். ”

  “ம். ஆனால் ரிட்டர்ன் டிக்கெட் நீ தான் போட்டுத்தரணும். ரயிலில் டிக்கெட் போடு.”

  இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே ஸ்ரீ பவித்ராவின் கைபேசியைப் பிடுங்கிப் பேச ஆரம்பித்தாள்.

  “ஹேம்நாத் ஸ்ரீ பேசுறேன். உனக்கு அந்த ஆளுங்களை நல்லா தெரியுமா? பவித்ராவுக்கு பணப்பேய் பிடிச்சி ஆட்டுது. அவள் உன் பொருப்பு. போலிஸ் கீலீஸ்னு பிரச்சனை வந்தால்.. ”
  ‘போலீஸ்? கவர்மென்ட்டே அடுத்த எலக்ஷனில் அவனுங்க கையில் போகப்போகுது’ என்று மனதில் நினைத்ததை வெளியே சொல்லாமல் “அப்படி எதவும் ஆகாமல் இருந்தால்? என்கூட நீ மகாபலிபுரம் வருவியா ஸ்ரீ?”
  ஸ்ரீ பதில் கூறாமல் கைபேசியை பவித்ராவிடம் கொடுத்து விட்டு அடுக்களைக்குள் நுழைந்தாள்.
  பவித்ரா ஹேம்நாத்துடன் பேசிவிட்டு ஸ்ரீயைத் தேடி அடுக்களைக்குள் வந்தாள்.

  பவித்ராவை பார்த்தும் பார்க்காததுபோல் ஸ்ரீ சாமான்களை கழுவியபோது ஸ்ரீயின் ஜடைப்பின்னலை பிடித்து இழுத்தபடி பவித்ரா அவளிடம் சொன்னாள் “ஸ்ரீ எனக்கு ரொம்ப நாளாக டச் ஃபோன் வாங்கணும் என்று ஆசைப்பா. அதான் மகாபலிபுரம் பார்ட்டிக்கு யஸ் சொன்னேன். ”


  “அந்த கண்றாவி ஃபோன் ரொம்ப முக்கியமா? ”

  “என்னப்பா ஸ்ரீ இப்படி கேட்டுட்ட? நீயும் மசூதும் கல்யாணம் செய்துக்கும்போது நான் உன்னை எதை வச்சு ஃபோட்டோ எடுக்க? உன் கல்யாணத்தை சிம்பிளாக திருப்பரங்குன்றம் கோயிலில் வச்சிடணும். ஆனா ஃபோட்டோ மட்டும் எடுத்து தள்ளிடணும் என்று வச்சிருக்கேன். ”


  மசூத் என்றதும் கோபம் பறந்தோட… “போப்பா.. மசூத் ஞாயிறு வந்தா போதையிலேயே மிதப்பானாமே? அவனை கல்யாணம் செய்திட்டு என்ன செய்ய?” என்று குறை பாடியவளிடம் “சூப்பர் டீ. ரம் வாசனையுடன் முத்தம் கொடுத்தால் சூப்பரா இருக்கும். அனுபவி. அப்புறம் போதையில் அவன்.. ”


  “உவ்வே.. போதும் போதும் கிக்காக பேசாதே. எனக்கு ரம் வாடையே பிடிக்காது. கல்யாணம் ஆனதும் முதலில் அதன் குடியை நிறுத்தணும். நீ இப்ப பேச்சை மாத்தறியா? மகாபலிபுரம் விஷயத்துக்கு வா. ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்கிற?”


  “ஸ்ரீ நாம்ம காசு சம்பாதிக்கணும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம். அழகும் அழகின் திமிரும் எவ்வளவு நாள் நிலைக்கும்? அதுக்கு முன்பாக காசு சம்பாதிக்கணும் ஸ்ரீ. திருப்பதி ஏழுமலையான் மட்டும் பணம் வச்சிக்கிட்டு என்ன செய்யிறார்? லட்டு கூட காசுக்குதான் வாங்குறோம். ஓசியில் கொடுக்கச் சொல்லு பார்ப்போம். அங்குதான் பணம் கொட்டிக் கிடக்குதே? கோயில் டிரஸ்ட்காரன் தரமாட்டான். பத்து காரணம் சொல்வான். உண்டியல் கணக்கைவிட செலவு கணக்கு மனப்பாடமாக சொல்வான். எனக்கு பணம் சேர்க்கணும். உனக்கு எனக்கு மோகனாவுக்கு தனுவுக்கு பிரித்விக்கு எல்லோருக்கும் பணம் சேர்க்கணும். உன்னைப்போல் இருப்பதை அள்ளிக் கொடுக்கமாட்டேன். ஆனால் எனக்குபோக மிஞ்சும் தொகை அவங்களுக்கு கொடுப்பேன். ஒரு நாலு ஐஞ்சு லட்சம் சேர்த்திடணும். ஒரு வீடை ஒத்திக்கு பிடித்திடணும். நான் என் கல்யாணத்தைப் பற்றி இப்ப யோசிக்கலை. பின்னாடி ஆசை வந்தா பார்க்கலாம். நீ நம்புன்னா நம்பு ஹேம்நாத்தை என் வீட்டு வாட்ச்மேன் ஆக்கணும் என்பதுதான் என் லட்சியமே.. ”
  ஹேம்நாத்தை வாட்ச்மேன் உடையில் கற்பனை செய்தவளுக்கு சிரிக்காமல் இருக்க முடியவில்லை. நன்றாக சிரித்து கலகலத்தவள் சொன்னாள்..


  “பவி உன் டார்கெட் சீக்கிரம் காலிங் பெல் அழுத்தப்போகுது. கிளம்பு. இரண்டு நாள் ஆகுமா? நீ போய் வர இரண்டு நாள் ஆகுமா? டிரஸ் எடுத்து வை. நான் வீட்டைப் பூட்டிட்டு போறேன்.” “சரி” என்ற பவித்ரா ஸ்ரீ கிளம்பும்முன் அவளிடம் ஐநூறு ரூபாய் வலுக்கட்டாயமாக கொடுத்துவிட்டுத்தான் அவளை அனுப்பினாள்.  ஹேம்நாத்


  ஹேம்நாத்தும் பவித்ராவும் ஒரு சொகுசு காரில் சென்னை சென்ற டைந்தனர். பார்ட்டிகாரன் காரில் போகும் போது பவித்ரா அந்த காரின் பிரம்மான்டத்தை கண்டு திடுக்கிட்டாள். கதவை திறக்கத் தெரியாமல் முழித்தாள்.
  சன்னலை கீழே மேலே ஏற்றத் தெரியாமல் அசடு வழிந்தாள். ஆனால் ஹேம்நாத் அவளுக்கு உதவுவதாக காண்பித்துக்கொண்டு செய்த பீத்தல்கள் எக்கச்சக்கம். அவன் முன்னேயிருந்த பட்டனைத் திருகி ஏ.சி காற்றை ஹேம்நாத் அவனது முகம்பார்த்து வீச வைத்தான்.


  அவன் சில்லரைத்தனம் சகிக்காமல் ஆறு மணிநேரமும் தூங்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள். வழியில் அவள் பார்த்த பல ரகமான வீடுகளும் அப்பாவுடன் கிரவுன்டில் கிரிக்கெட் விளையாடும் குழந்தைகளும் அவள் மனதில் ஆழிப் பேரலைகள் ஓங்கி எழச்செய்தது. அந்தக் குழந்தைகளிடம் பொறாமையும் வீடுகளிடம் பேராசையும் தோன்றியது. அழகான அப்பார்ட்மென்ட்களைப் பார்க்கும்போது சொல்லவே வேண்டாம் கடவுளை கரித்துக்கொட்ட ஆரம்பித்திடுவாள்.


  சென்னையில் இறங்கியதும் வேறு கார் ஜம்மென்று அவர்கள் பக்கத்தில் வந்து நின்றது. மதுரையிலிருந்து அவர்கள் வந்த கார் இப்போது வந்த காருடன் போட்டி என்ன? பக்கத்தில் நின்று ஹார்ன்கூட அடிக்கத்தகுதி கிடையாது. ஹேம்நாத் கார் டிரைவருடன் ஏதோ பேசினான். பிறகு அவர்கள் வந்து நின்ற புதிய காருக்குள் ஏறி அமர்ந்தனர். அவர்கள் ஏறியதும் கார் நூற்றி இருபதில் பறந்தது. ஆனால் பஞ்சு மெத்தையில் படுத்துக்கொண்டே அலுங்காமல் குலுங்காமல் பறப்பதுபோலதான் பவித்ரா உணர்ந்தாள்.


  காரின் மேல்பாகம் அகல திறந்து உள்ளே உட்கார்ந்திருந்த பவித்ராவிற்கு சல சலவென காற்றை முகத்தில் அடித்தது. ஹேம்நாத் பவித்ரா மகாபலிபுரம் போய்சேரும் வரை உடன் இருந்தான். மகாபலிபுரத்தில் ஒரு அழகிய வீட்டின் முன்பாக கார் போய் நின்றது. வீடு வந்ததும் அவளிடம் ஹேம்நாத் கூறினான்
  “பவி பக்கத்தில் ஒரு ரிசார்ட்டில் எனக்கு ‘பார்ட்டி’ ரூம் போட்டிருக்கான்.


  நம்ம மதுரை வார்ட் கௌன்சிலருடைய மச்சினன்தான் இந்த பார்ட்டி. ஊரிலேயே விஷயத்தை சொல்லியிருப்பேன். கட்சிக்காரன் என்றால் ஸ்ரீ பயப்படுமே அதான் சொல்லலை. நீ பார்த்து கவனமாக நடந்துக்கோ. உன் செல் கையில வச்சிக்கோ. நான் காலையில பத்து மணிக்கு கூப்பிடுறேன். ”
  ஹேம்நாத் விட்டுச்சென்றதும் பவித்ரா வீட்டிற்குள் நுழைந்தாள். அங்கே வேலையாட்கள் இருவர்தான் இருந்தனர். இப்போது அவளுக்கும் புரிந்தது. ஏன் ஹேம்நாத் ஸ்ரீ யை அழைச்சிட்டு வர துடித்தான் என்று நன்றாகவே புரிந்தது. புளியங்கொம்பை விட மனசு வருமா? பார்ட்டிக்காரன் புளியங்கொம்புதான் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.


  பவித்ரா உள்ளே நுழைந்ததும் அவளது அறை அவளுக்கு காட்டப்பட்டது. குளித்துவிட்டு வெற்றுடலில் ரோப்பை சுற்றிக்கொண்டு வந்தவள் அறையின் ஒவ்வொரு பொருளையும் ஆசை ஆசையாய் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அருகே ஒரு ஆண் குரல் கேட்டதும் திடுக்கிட்டு திரும்பினாள். பீச் மண் அப்பிக்கிடந்த அழுக்கு ஷார்ட்ஸ{டன் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். குரலுக்குச் சொந்தக்காரன் கேட்டான் “என்ன? வீட்டின் எஜமானியா இருந்தா அதிஷ்டக்கட்டையாக இருந்திருக்கலாமே என்று தோன்றுதா? ”  ‘கொழுப்பைப் பார்’ என்று எண்ணியவள் சூடாக அவனுக்கு பதில் தர எண்ணிச் சொன்னாள் “எஜமானி அதிஷ்டக்கட்டையா? நான் தான் அதிஷ்டக்கட்டை. ஒரு நைட்டிற்கு தினம் பத்தாயிரம் கிடைச்சால் நான் தான் லக்கி. எஜமானிக்கு என்ன கிடைக்கும்? ஒரு கொத்து சாவியும் பத்து பேன்சி சேலையும் தானே. அதை நானே பத்து நாளில் வாங்கிக்குவேன்.”


  அவளை கேலி பேசியவன் அவள் அருகே சென்று ‘நீ என் ஜாதி’ என்று கூறி அவள் ரோப்பில் கை வைக்க அவள் பட்டென்று விலகி ஹேம்நாத்தை அழைக்க நினைத்து கைபேசியை இயக்கிக்கொண்டே கேட்டாள் “ஏய் எத்தனை பேர்? ஹேம்நாத் பார்ட்டி ஒருவன் என்றானே? ஏய் கேக்கறேன்ல? பதில் சொல். கிட்ட வராதே. கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுவேன். ”

  “யாரோ தன்னை லக்கின்னு சொன்னாங்களே? ”

  தன் நிலையால் வெட்கியவளாய் ஸ்ரீயின் வார்த்தையை மீறியதை நினைத்து நொந்தாள். கண்ணிலிருந்து கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.
   
 10. Kavyakeerthi

  Kavyakeerthi Active Member

  Joined:
  Oct 15, 2018
  Messages:
  177
  Likes Received:
  120
  Trophy Points:
  43
  Nice updates.
   

Share This Page