En parvaiyil velliththirai / என் பார்வையில் வெள்ளித்திரை by பாலா

Discussion in 'Open Talk' started by S.B.Nivetha, Aug 15, 2017.

  1. Balakarthik Balasubramani

    Balakarthik Balasubramani Well-Known Member

    Joined:
    Aug 3, 2017
    Messages:
    339
    Likes Received:
    453
    Trophy Points:
    63
    Gender:
    Male
    தரமணி விமர்சனம்

    பாடலாசிரியர் நா.முத்துகுமாருக்கு நன்றி சொல்ல, 'இந்தியா - இலங்கை ஆட்டத்தில் 'இந்தியா தோற்கவேண்டும்' என கிரிக்கெட்டில் வேண்டிக்கொள்ளும் ஆரம்ப காட்சியில் வித்தியாசமான எண்ணத்துடன் சூடு பிடிக்கிறது திரைப்படம். இந்த வார்த்தை சுய நலமான ஒன்றே. இருப்பினும், இது இலங்கை எல்லையின் அருகாமையில் மீன்பிடிக்கும் மீனவர்களை கொன்றுவிடுமோ என்னும் அச்சத்தில் என தெரிந்துக்கொள்ளும் காட்சி மிகவும் அருமை. ஆம், இந்தியா - இலங்கை ஆட்டத்தில் இலங்கை வென்றால் ஒழிய, இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என சொன்ன விதம் என்னை சிலிர்க்க வைத்தது. இந்தியா ஜெயித்ததா? தோற்த்ததா? படம் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

    ஒரு மழையில் பிரபு நாத் என்கிற வசந்த் ரவி, ஆல்தியா என்கிற ஆண்டிரியாவை சந்திக்கிறார். சும்மா சொல்லகூடாது, நான் 'காதல் கண் கட்டுதே' ஆதுல்யாவ ரசித்தத விட ஆல்தியா என்னும் ராமின் படைப்பை நூறு மடங்கு ரசித்தேன்.

    ஆல்தியாவிடம் பிரபு நாத் தன் காதல் கதையை கூறத்தொடங்க, பல ஆண்களிடம் சிக்கிக்கொண்ட பெண்களின் கதையானது தொடங்குகிறது. ஆனால், ஆண்கள் சிக்கிக்கொள்ளும் விதமானது வேறுபட்டு ராமின் இரண்டு கோண கதை வடிவத்தை தெளிவாக காட்டுகிறது.

    சொல்லப்போனால், இந்த திரைப்படம் 2 மணி நேரம் 28 நிமிடங்கள் ஓடினாலும், 4 மணி நேரக்கதையை அழகாக செதுக்கியிருக்கிறார் இயக்குனர்.

    பெண்ணின் மீது அதீத பாசம் வைக்கும் ஆணாக வசந்த் ரவி தன் நடிப்பை வெளிப்படுத்த முயல, அவரை காதலிக்கும் கதாப்பாத்திரத்தை அஞ்சலியும் நிறைவு செய்து அயல் நாடு செல்கிறார். அதோடு அவருடைய வாழ்க்கையானது மாற தொடங்க, மது அருந்தி, தாடி வளர்த்து தன்னையும் மாற்றிக்கொண்டு, மாற்றிய விதத்தை நியாயப்படுத்தி ஆல்தியாவிடம் வாதாட, 'தம் பிடிக்காத! உனக்கு பிடிக்க தெரியல...' என எதார்த்தத்தை பதிவு செய்து சிரிப்பையும் வரவழைக்கிறார் ஆல்தியா.

    ஆல்தியா என்னும் ஒருவளின் வாழ்க்கையில் அவளுடைய கணவனால் ஏற்படும் திருப்பங்கள் புதுமை. எதார்த்தமும் கூட. அதனால் அவள் செவிக்கொடுத்து கேட்கும் 'பிட்ச்' என்ற வார்த்தை குழந்தையை பாதிப்பது மிகவும் அருமை.

    'பசங்க-2'வுல சூர்யா ஒரு வசனம் சொல்வாரு. 'குழந்தைங்க எப்போதும் கெட்ட வார்த்தை பேசாது. கேட்ட வார்த்தைய தான் பேசும்னு...' நாம் என்ன சொல்லி தரமோ அத தான் குழந்தைங்க பேசும். அதுனால கணவன்-மனைவி குழந்தைங்க முன்னாடி சண்டை போட்டுக்க கூடாதுனு பெரியவங்க சொல்வாங்க. அந்த எதார்த்தத்த ரொம்ப அருமையா பதிவு செஞ்சிருக்கீங்க சார்.

    ஆல்தியாமீது வசந்த் ரவிக்கு காதல் பிறக்க, அதனை ஆல்தியா மறுத்து அதன் பின் அவனுடனே வாழ்வது இது தான் Living Together என அதன் அர்த்தத்தை மாற்றுகிறது. அதன்பின்னர், ஆல்தியாவும் வசந்த் ரவி மீது காதல் கொள்ள அதனால் உண்டாக்கும் சந்தேகங்களை பகிர்ந்துக்கொண்ட விதமானது, ஒரு ஆணின் கையில் சிக்கும் பெண்ணை பிரதிபலிக்கிறது.

    ஆல்தியாவை தவறான கோணத்தில் பார்க்கும் அவருடைய பாஸை, ஆல்தியா ஹேண்டில் செய்யும் விதம் சபாஷ். பாஸின் மீது கோபத்தை வெளிப்படுத்தி, வசந்த ரவியிடம் வேறு விதமாக அவள் கோபம் மற்றும் அழுகையை காட்ட, மத்தவங்க சொல்ற மாதிரி நீ பிட்ச் தான் என வசந்த ரவியும் சொல்லும் தருணம் ஆல்தியாவின் மன வெளிச்சத்தை அவ்வளவு அழகாக பதிவு செய்கிறது. 'நெருக்கப்பட்டவர்களிடம் தான் இப்படி தன் மன நிலையை பகிர்ந்துக்கொள்ள முடியும்...' என வசந்த் ரவி அதன்பின் புரிந்துக்கொள்வதும் அருமை.

    இரவு வேலையென மனைவியை தவிக்க விடும் கதாப்பாத்திரத்தில் அழகன் பெருமாள், பர்னபாசாக வருவது வசந்த் ரவியின் தனிமைக்கு கைக்கொடுக்கிறது. 'பெண்களையே எல்லாத்துக்கும் குத்தம் சொல்லாதீங்க...' என்பதை இயக்குனர் ராம் அவர் கேரக்டர் மூலமாகவும் அழுத்தமாக பதிவு செய்கிறார். அஞ்சலியால் கைவிடப்படும் வசந்த் ரவி பெண்களை ஏமாற்ற முயல, அதில் தனக்கு வேண்டியவர்களும் எதார்த்தமாக பாதிக்கப்படுவது... 'தனக்கு நடக்கும் வரை அனைத்தும் கேளிக்கையே..' என்பதை அழகாக பதிவு செய்கிறது.

    இன்ஸ்பெக்டராக வருபவர் தன் மனைவியை ஏமாற்ற நினைக்க, ஆனால், இன்ஸ்பெக்டரை அவர் மனைவி ஏமாற்றி, மாற்றி பாடம் புகட்டுவது மிகவும் நேர்த்தி. அதிலும், தன் கணவரின் கேள்விகளுக்கு இராமாயணம் ஏந்தி பதில் அளித்த விதம் அடடா...

    உண்மையான பாசம் தெரியாமல் ஒருவரிடம் பணத்தை திருடி பாவத்தை சம்பாதிக்கும் வசந்த் ரவி அதனை திருப்பிக்கொடுக்க செல்வது மிகவும் சூப்பர். ஆனால், "பாரத பிரதமர் 500,1000 செல்லாது' என கூறியதனால் இவர்கள் என்ன செய்ய போகிறார்களோ எனவும் வசனத்தை தாங்கி ராம் ஏழைப்பாட்டை கூறுகிறார்.

    என்ன செய்வது? நம் பாரத பிரதமர் ஆழம் பார்த்தது கடலாயிற்றே. குளமாக இருந்தால் மீன்கள் மாட்டக்கூடும். கடல் என்பதால் அப்பாவி மீன்கள் சில மாட்டியது உண்மைதான். யாருக்குதான் சுய நலம் இவ்வுலகில் இல்லை. நான் கூட இந்த பண மதிப்பிழப்பு காலம் முடிந்து ஒரு 500 ரூபாயை எதார்த்தமாக எடுத்தேன். கையில் காசு இல்லாதபோது இதனை எப்படியாவது மாற்ற முடியாதா? என ஏங்கினேன்.

    எல்லோரும் ஏதோ ஒரு சுய நலத்திற்காகதான் வாழ்ந்து வருகிறோம். இருப்பினும், ராம் கூறியதை போல் அவ்வாறு எந்த ஒரு பெரும் பாதிப்பு யாருக்கும் ஏற்பட்டிருக்க கூடாது எனவும் மனமானது பதைபதைத்து கடவுளையும் வேண்டுகிறது.

    தரமணியில் நீர், காடுகளை தூற்றி, வீடு கட்டிட அங்கே வாழ்ந்த புறாக்கள் வந்து பார்த்து சென்றதாக கூறிய விதம் அருமை. குறிப்பாக, ஆல்தியாவால் பாசம் காட்டப்படும் அந்த புறா தன் ஜோடியை அழைத்துக்கொண்டு வீடு தேடி வந்து கண்ணாடியில் மோதும் காட்சிகள் கண்களை கலங்க வைத்தன.

    பெண்களை ஏமாற்றுவது போல் வசந்த் ரவியை சித்தரித்து, அதன் பின், 'புகை பிடிப்பது', 'மது அருந்துவது' போல் பெண்களை ஏமாற்றுவதும் தவறு என்பதை கூறி அதற்கான தண்டனையை வாய்வழியாக இயக்குனர் கூறியது மிகவும் அருமை. புதுமையும் கூட.

    'புலித்தோல் போர்த்திய புலி. நாமா இல்லை பெண்களா?' என கேட்பது யோசிக்க வேண்டிய ஒன்று. வசந்த் ரவி மது அருந்த ஒரு காரணம் கூற, அதற்கு ஆல்தியாவும் பதில் காரணம் கூறி, 'ஆண் பிடித்தாலும் பெண் பிடித்தாலும் புகையால் வருவது புற்று நோயே' என்னும் அவர் கருத்தை உணர்த்துகிறார் இராம்.

    தன் மனைவியை அடித்துவிட்டு வந்து கலங்கும் பர்னபாஸ், "அவளும் யாருக்கோ ஒருத்திக்கு அக்காதானலே! யாருக்கோ ஒருத்திக்கு மகள் தானல...! என சொல்லும் வசனம் ஆணாதிக்கத்தை ஒடுக்கி சம நிலையை காட்டுகிறது.

    வசந்த் ரவி, ஆல்தியாவை புரிந்துக்கொள்ளாமல் திட்டிட, அதன் பிறகு ஒரு நாள், அவன் கண் முன்னே நடக்கும் சம்பவத்தினால் ஆல்தியா அன்று அடைந்த வேதனையை உணர்ந்ததை பதிவு செய்த விதம் மிகவும் சிறப்பு.

    ஆல்தியாவின் மகன் அவள் குடித்து போட்ட காலி பாட்டிலை எடுத்துக்கொண்டு புறப்பட,
    'இது யாரு குடிச்சிட்டு போட்ட பாட்டில்' என ஒருவர் கேட்க, அதற்கு 'என் அப்பா' என அவன் சொல்வது அவன் படித்த படிப்பை உயர்த்தி, பெற்றோர் குழந்தைகளின் முன்னே தவறு செய்து படித்தும் முட்டாளாகக்கூடும் என்ற யதார்த்தத்தை பதிவு செய்கிறது.


    தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் அழகோ அழகு பேரழ. அதிலும் அழகு, அவர் காட்சிப்படுத்திய மழைத்துளிகள். அது விழும் அழகானது, '3D' தரமானது ஒருவரது கேமராவின் நேர்த்தியை கையாள்வதிலே காண்பது என்பதை தெளிவாக காட்டுகிறது. '

    'அவதாருக்கே நீங்க ஒளிப்பதிவு பண்ணலாம் பாஸ்...'

    ஸ்ரீ கர் பிரசாத்தின் எடிட்டிங்க் வேலைகள் மிகவும் அற்புதம்.

    Prism & Pixels இன் Vfx பணிகள் மிகவும் துல்லியம். அந்த நாய், டால்பின், மற்றும் புறாக்கள்...

    யுவனின் பின்னணி இசை மேலும் படத்திற்கு பல மடங்கு பலம் கூட்டிட, பாடல்களும் மிகவும் அருமையாக தேவைக்கேற்ப காரணத்துடன் ஒலித்து நீண்ட நாட்களுக்கு பிறகு யுவனின் இசையை மனதில் சேர்க்கிறது.

    எதார்த்தத்தை பதிவு செய்யும் இராமின் மற்றுமோர் சிறந்த படைப்பு தான் இந்த தரமணி. இதில் இடம்பெறும் ஒவ்வொரு வசனமும் மனதில் நிற்க மறுத்திட, அதற்கான காரணம், அனைத்து வசனங்களையும் மனதில் பதிய வைக்க மறந்த நம் மனம், திரைக்கதையில் மூழ்கி அப்படியே உட்கார்வதனாலே என்பதையும் உணர்த்தக்கூடும்.

    பிரம்மாண்ட திரைப்படங்களின் மத்தியில் உண்மையை பதிவு செய்த ராமிற்கு நன்றி பாராட்டுவதில் தவறேதும் நான் காணவில்லை.

    தரமணி: ஆண்களால் சிக்கிக்கொண்ட பெண்களை மட்டுமல்லாமல், பெண்களால் சிக்கிக்கொண்ட ஆண்களையும், அதனால், தவறாக முடிவை எடுப்பதனால் ஆண்களால் அப்பாவி பெண்களும் சிக்கிக்கொள்கின்றனர் என்பதை சொல்லி ஆணும் பெண்ணும் சரி சமமே என்னும் நோக்கத்துடன் எடுத்த படைப்பாகவே இதனை நான் பார்க்கிறேன்.

    பல கஷ்டங்களை கடந்து உருவாகிய இராம் என்னும் இயக்குனரின் உண்மை முகம் தரமணியின் மூலம் ஆங்காங்கே ஸ்டேடஸாகவும் வலம் வருகிறது.

    இங்க யாரும் யாரையும் கெடுக்கிறது இல்ல. எல்லோருமே ஏதோ ஒரு சுய நலத்துக்காக தான் வாழ்றோம் என்பதை அருமையாக பதிவு செய்த படம் தான் தரமணி...

    தரமான யதார்த்தத்தின் பதிவு....

    அழகை மட்டும் காணும் சமூகத்தின் மத்தியில்...ஆல்தியா என்ற பெண்ணை அணு அளவும் படம் முழுவதும் ரசிக்க வைத்தது இந்த தரமணி.

    Tharamani - "All Genders are Equal. No one perfect in the world"

    Thank you so much for give a Best Film

    - பாலகார்த்திக் பாலசுப்பிரமணியன்
     
    Last edited by a moderator: Sep 9, 2017
  2. Balakarthik Balasubramani

    Balakarthik Balasubramani Well-Known Member

    Joined:
    Aug 3, 2017
    Messages:
    339
    Likes Received:
    453
    Trophy Points:
    63
    Gender:
    Male
    விவேகம் விமர்சனம்

    படம் நல்லா இருக்கா இல்லையா? என சமீபத்தில் பலத்தரப்பட்ட விமர்சனங்களால் பூசப்பட்ட சிவாவின் திரைப்படம். கடின உழைப்பை நிருபிக்கும் நடிகர்களுள் ஒருவரான அஜித்குமார் அவர்கள் நடித்து வெளிவந்த திரைப்படம்.

    தமிழில் ஒரு ஜேம்ஸ் பாண்ட் பாணியில் முதல் திரைப்படம் என்பதில் எத்தகைய சந்தேகமும் வேண்டாம் என்பதை அஜித்குமாரின் முதல் காட்சியே உணர்த்துகிறது.

    ஆனால், ஜேம்ஸ்பாண்ட் திரைப்படம் என்றால் துப்பறியும் சுவாரஸ்யமான கதைக்களம் கொண்டிருப்பதை நாம் பார்த்து இருக்கிறோம். அதனை விவேகம் தந்ததா?

    ஆம், கண்டிப்பாக... அதற்கு சிவாவிற்கும் படக்குழுவிற்கும் பெரிய பாராட்டுக்கள்.

    முதல் 20 நொடிகள் அறிமுக காட்சிகளாக சோர்ந்து சென்றாலும், அதன் பின்னர் சூடுப்பிடிக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

    சில இடங்களில் வைக்கும் நியூக்ளியர் பாம்ப், நடாஷா என்ற பெண்ணால் மட்டுமே செயழிலக்கும் என தெரியவர, அதனை தேடி அஜய்குமார் என்ற கதாப்பாத்திரத்தில் மிகவும் நேர்த்தியாக நடித்திருக்கிறார் அஜித்குமார். நடாஷாவை கண்டுபிடிக்கும் காட்சிகள் அனைத்தும் விருவிருப்புடன் செல்ல, நண்பர்களால் முதுகிலும் குத்தப்படுகிறார்.

    விவேகம் கொண்டு நாடாஷாவை கண்டுபிடிக்கும் அஜித்குமாரின் பாத்திர அமைப்பு பலே சொல்ல வைக்கும் ஒரு கதாப்பாத்திர வடிவமைப்பு...

    அதன்பின்னர், துரோகத்தால் பல வலிகளை சந்திக்க, நண்பன் என தன்னை அழைக்கும் விவேக் ஓபுராய் கடைசிவரை தன் நண்பனை புகழ்ந்து, 'பணம், பதவி, அதிகாரம்...' எது வேண்டுமென்றாலும் உனக்கு நான் தருகிறேன். என்னை விட்டு விடு...' என கெஞ்சும் காட்சிகள், கடைசி வரை அஜய்குமாரை அழிக்க துடிக்கும் உணர்வையும், அவர் பல காட்சிகளில் அஜித்தை புகழ்வதற்கான காரணத்தையும் தெளிவாக காட்டுகிறது.

    அஜய் குமாரின் மனைவியாக வரும், காஜல் அகர்வால் இராணுவம் போன்ற உயிர்காக்கும் வீரர்களின் வாழ்க்கையை அழகாக பிரதிபலிக்கிறது. அதுவும் தன் கணவன் கஷ்டத்தில் இருக்க, எதார்த்தமாக போன் செய்யும் அவர், அஜித்துக்கு நம்பிக்கை தருவது போன்ற காட்சி அமைப்புக்கு சிறுத்தை சிவா என்னும் பாச பாணியை இராணுவ கதைகளத்தில் கையில் எடுத்தமைக்கு கைத்தட்டலே நாம் தரலாம்.

    இரண்டாம் பாதியில் வசனங்கள் நச்...

    'இத பத்தி உனக்கு நல்லா தெரியும். தெரியாதவங்களுக்கு தான் ஆரம்பம் முதல் கடைசி வரை வலியும் வேதனையும் இருந்து சாகனும்... இத பத்தி தெரிஞ்ச உனக்கு ஒவ்வொரு நிமிசமும் நரக வேதனை தான்...' அப்டின்னு தொழில் நுட்பம் பற்றி கூறும் அஜித்தின் வார்த்தைகள்... கபிலன் வைரமுத்துவிற்கும் சேர்த்து கைத்தட்டல் தரக்கூடியவை.

    'நீ ஆள்றதுக்காக செய்ற, நான் வாழ்றதுக்காக செய்றேன்...' இது போன்ற வசனங்கள் பலவும் நம் மயிர்கூச்சலை உண்டாக்க செய்வன.

    படத்தின் பலமாக சிவா, கபிலன் வைரமுத்து, அஜித்குமார் இருந்தால்...இன்னொரு பலம் ஒளிப்பதிவு. வெற்றி, மற்றும் E.கிருஷ்ண சாமியின் ஒளிப்பதிவு ஹாலிவுட் தரத்தில் படத்தை எடுத்து செல்ல, எடிட்டர் ரூபனின் கத்தரிக்கோலும் சும்மா புகுந்து விளையாடி விவேகத்தை வேகப்படுத்தியிருக்கிறது.

    திரைக்கதை வடிவமைப்பை செதுக்கி கபிலன் வைரமுத்து, சிவா, ஆதி நாராயணாவின் கதைக்கள தேர்வு அயல் நாட்டை சார்ந்திருக்க, அதற்கு ஏற்ப, அஜித்குமாரின் ஸ்டண்ட் காட்சிகள் படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது.

    அக்ஷ்ரா ஹாசன் நடிப்பிற்கு குறைவான தேவையே இருந்தாலும், ஹாலிவுட் பாணியில் ஹேர் ஸ்டைலுடன் பட்டையை கிளப்பி, 'ஹாக்கருக்கு பாசம் உண்டு...' என்பதை நிருபிக்கிறார். 'வாழ்றதுக்காக இவ்ளோ நாள் ஓடினேன். சாகும்போதுனாலும் ஒரே இடத்துல சாகுறேன்...' என சொல்லும் காட்சிகள் மிக எதார்த்தமாக ஹாக்கர் வாழ்க்கையை பதிவு செய்கிறது.

    அனிருத்தின் இசை விவேகத்திற்கு வேகத்தை சேர்ப்பதோடு, தேகத்தின் உணர்வுகளை இசையால் சிலிர்க்க செய்வதோடு, ரியல் ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் படம் போன்ற விருவிருப்பை பல மடங்கு தருகிறது.

    ஒட்டுமொத்தத்தில் விவேகம்...

    அஜித்குமார் என்ற தனி நபரின் முயற்சி மட்டுமல்ல... படக்குழுவினரின் ஒட்டுமொத்த வித்தியாச முயற்சி என்பதே உண்மை.

    வேகத்துடன் செல்லும் விவேகம், தமிழ் திரைப்பட உலகில் ஓர் புதிய முயற்சி மற்றும் கடின உழைப்பின் ஓர் அங்கமும் கூட.

    My Mind Never Disappoint in the Single Shot....

    என்னோட சின்ன கவலை என்னனா, நான் எதிர்ப்பார்த்த ஒரு சில காட்சிகள் பாடலில் வந்தது தான். ஆம் பீரங்கி சண்டை போன்ற காட்சிகள் படத்தில் இருக்குமென நினைத்து, பாடலில் கண்டு கொஞ்சம் கவலை அடைந்தேன்.



    இதுவரை வந்த திரைப்படங்களில் மங்காத்தாவிற்கு அப்புறம் நான் நிஜமாக ரசித்த ஒரு திரைப்படம்...

    விவேகம்...

    Vivegam: First Time in Tamil Cinema to see lot of Technical Aspects and Sentiment as well as more Hard work as like as Hollywood Perspective view.

    Hats off to the Whole Team...


    - Balakarthik Balasubramanian
     
    S.B.Nivetha likes this.
  3. Balakarthik Balasubramani

    Balakarthik Balasubramani Well-Known Member

    Joined:
    Aug 3, 2017
    Messages:
    339
    Likes Received:
    453
    Trophy Points:
    63
    Gender:
    Male
    மெர்சல் விமர்சனம்

    இந்த டைட்டிலில் காணப்படும் காளையின் கொம்பு முதல் வால் போல் படமும் தொடக்கம் முதல் இறுதி வரை வீரியம் குறையாமல் இருந்ததா?

    வாருங்கள் பார்க்கலாம்...

    தளபதி விஜய்யால் விதைக்கப்பட்ட விதை, வினையால் அறுக்கப்பட, வினையை தேடி விதைகள் அறுப்பது தான் மெர்சல்.

    அட்லீயின் அவதாரம் ஏ.ஆர். முருகதாஸை கண் முன் காண்பித்தது என்பதே உண்மை. அதற்கு பலத்த கைத்தட்டலுடன் கரகோஷம் பல காட்சிகளில் கிடைத்தது என்பதே உசிதம். புள்ளி விவரங்களில் பட்டையை கிளப்பிய அட்லீ, 5 ரூபாய் டாக்டர் மூலம் சமீபத்தில் கோயம்புத்தூரில் இறந்த டாக்டரை மனதில் விதைத்து நினைவை சுமக்கிறார்.

    விஜய்யின் அவதாரம் 2 அல்லது 3 என்னும் குழப்பத்தில் வைத்திருப்பது மிக அழகு எதிர்பாராத திருப்பமும் கூட. மாறனாக வேஷ்டி சட்டையில் தமிழ் புகழை அயல் நாட்டில் பரப்ப, ஆக்ரோஷத்துடன் அங்கே ஒருவரை கொலை செய்வதில் தொடங்குகிறது கதை.

    சமந்தாவும், காஜல் அகர்வாலும் அட்டை பூச்சியாய் படத்தில் ஒட்டிக்கொள்ள முயல, நித்யா மேனன் நங்கூரமாய் பாய்ந்து மக்கள் மனதில் காட்சி வடிவமைப்பில் கவனத்தையும் ஈர்த்து, திறனையும் வெளிப்படுத்துகிறார்.

    யோகி பாபு ஒரு சில காட்சிகளே வர, கோவை சரளாவும் ஸ்கைப்பை லாக் அவுட் செய்துவிட்டு செல்வதோடு தன் பணியை நிறைவு செய்ய, அவ்வப்போது வந்து செல்கிறார்.

    கவுரவ தோற்றத்தில் சத்யராஜ் சில காட்சிகளே வந்தாலும், அவரிடம் மாறன் சொல்லும் அந்த காளி வெங்கட் கதை கண்களில் தண்ணீரை வரவழைக்க, மருத்துவ துறையின் ஊழலையும் படம்பிடித்து காட்டுகிறது.

    வாழ்த்துக்கள் அட்லீ...

    வடிவேலுவிற்கு நடிப்பதற்கான வாய்ப்பு குறைவெனினும், அவர் கதாப்பாத்திரம் பேசும் விதமாக அமையக்கூடும். Great Comeback...

    அனைவருக்கான வாய்ப்புகளும் குறைவாக இருக்க, நிறைவாக பேசுகிறது தளபதியின் காட்சிகளும், எஸ்.ஜே.சூர்யாவின் மிரட்டல் வில்லத்தனமும்...

    1970-80இல் நாம் கேட்ட அந்த வார்த்தை இன்றும் நாம் கேட்கிறோம். அது தான்., டாக்டர்கள் கூறும், 'பத்து நிமிடம் முன்னாடி அழைச்சுட்டு வந்திருந்தா காப்பாத்தி இருக்கலாம்...' அன்று தான் இப்படி என்றால், இன்றும் அதே டயலாக்கை மருத்துவமனையில் கேட்கிறோம். அப்படி என்றால், நவீனம் வளரவில்லையா? இல்லை, வளர்ந்த நவீனம் நசுக்கப்படுகிறதா?

    மருத்துவத்துறையில் பூசப்பட்ட முலாமை தோலுரித்து காட்டுகிறது இந்த மெர்சல்.

    தளபதி அப்பா விஜய்யின் வாழ்க்கை போது பிரசவம் பார்க்கும் பஞ்சாப் மக்கள் போன்ற காட்சிகள் மனித நேயத்துக்கு மொழியோ, மதமோ கிடையாது என்ற கோணத்தில் இந்தியாவின் புகழை ஓங்குகிறது. தளபதியாகவும், அவர் மகனை இளைய தளபதியாகவும் அழைக்க நினைத்த யோசனை அற்புதம்.

    நித்யா மேனனுக்கு நடக்க போகும் விபரீதம் பற்றி எஸ்.ஜே.சூர்யா பேசும் காட்சிகள் நம்மை யோசிக்க வைக்கும். அதுவும், 'சிசேரியன இப்போ பார்த்து ஆச்சரியப்படுவாங்க. அதே இன்னும் 25 வருஷம் கழிச்சு சுக பிரசவம்னா ஆச்சரியப்படுவாங்க' போன்ற வசனங்கள் நச். எங்க அப்பா-அம்மாவுக்கு 19 குழந்தை போன்ற காட்சிகள் நமது மூதாதையர்களின் வாழ்க்கையை அழகாக காட்டுகிறது.

    வினையால் அறுக்கப்பட்ட விதை, விதையால் இறுதியில் அதே மாதிரி அறுக்கப்படுவது சிறப்பு மிக சிறப்பு...

    All Fight are like as Real. No Build up..Especially i like the Fire accident Sequence....Pakka Class +Mass...

    மேஜிக் சாகச காட்சிகள் வடிவமைப்பு புது வித யுக்தியில் அனைவரையும் கவரும். விஷ்ணுவின் ஒளிப்பதிவு புதிதெனினும் அதற்கான சாயல் கொஞ்சமும் தெரியவில்லை. அவ்வளவு அற்புதம். எடிட்டர் ரூபனின் கத்தரிக்கோல் பாடல்களில் சரியாக தெரிய, காட்சியின் வேகம் அதிகரிப்புடன் டாப் கியரில் செல்கிறது.

    இசைப்புயலின் தாக்கம் தேவைக்கேற்ப அருமையாக ஒலித்து கைத்தட்டலை பெறுகிறது. விவேக் அண்ணாவின் பாடல் வரிகளும் படத்திற்கு பலம்...

    முத்து ராஜின் ஸ்டேஜ் செட் கடந்த காலத்தையும், ரியல் மேஜிக் அரங்கத்தையும் பிரதிபலித்து காலம் கடந்து சென்ற உணர்வை தருகிறது...

    Sri Thenandal நிறுவனத்தின் தயாரிப்பு புது வித ரா(ர)கம். பாராட்டவும் வேண்டிய விஷயம். 50 சதவிகித தள்ளுபடி மெர்சல் டிக்கட்டுக்கென பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். இருப்பினும், என்னால் அதனை பயன்படுத்த முடியவில்லை.

    தளபதி விஜய்யின் இரண்டு நேர் காணல் காட்சிகள் (Interview) பேசும் விதமாக கண்டிப்பாக இருக்கும்.

    இன்றைய சமூகத்துக்கு தேவையான கதையை தந்த அட்லீ, விஜயேந்திர பிரசாத், ரமண கிறிவாசனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    மெர்சல் - காளையின் வீரம் முதல் 30 நிமிடங்கள் மாயம் செய்ய, அடுத்த 30 நிமிடங்கள் காயம் செய்ய, இரண்டாம் பாதி தமிழன் பெருமையை பேசி இறந்த கால வாழ்க்கையை ஆடைகளாலும், பாட்டி குசும்பாலும், தளபதி நித்யா மேனன் மீது வைத்திருக்கும் அன்பினாலுமென பல வித தமிழன் திறமையை ஒருங்கிணைத்து பேசி நினைவை தேக்கி இறுதியில் வீரியத்துடன் காளை அடுத்த ஜல்லிக்கட்டுக்கு தயாராக காணாமல் போகிறது.

    Mersal: Until Final Touch...No one ready to face the Bull. Brave and Bold Screenplay...

    Biggest Applause to the whole Team....

    - பாலகார்த்திக் பாலசுப்பிரமணியன்
     
    S.B.Nivetha likes this.
  4. Balakarthik Balasubramani

    Balakarthik Balasubramani Well-Known Member

    Joined:
    Aug 3, 2017
    Messages:
    339
    Likes Received:
    453
    Trophy Points:
    63
    Gender:
    Male
    புரியாத புதிர் விமர்சனம்...

    ஒரு பெண் மாடியின் உச்சியில் நின்று போனில் ஸாரி கேட்க, அவள் விழும்முன் போன் உடைந்து நோருங்குவதில் தொடங்குகிறது கதை.

    விஜய் சேதுபதி கதிர் என்னும் கதாப்பாத்திரத்தில் வழக்கம்போல் களையுடன் இருக்க, அவன் வாழ்வில் மீரா என்னும் பெண் வருகிறாள். மீராவாக நடித்திருக்கும் காயத்ரியின் அறிமுக காட்சி ரசிக்கும் விதமாக புதுமையுடன் காணப்படுகிறது.

    "வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்கதவிட நிம்மதியா இருக்கனும்" இந்த வசனம் சூப்பர்.

    அப்புறம், மீரா கதிர் கையில் ஒரு புத்தகத்தை கொடுப்பார். அந்த புத்தகத்தின் தலைப்பு "EVERYTHING MAN KNOW ABOUT WOMAN" என இருக்கும். ஆனால் உள்ளே பார்க்க வெற்று காகிதமாக இருக்கும் அந்த காட்சியை நான் மிகவும் ரசித்தேன்.

    விஜய் சேதுபதியுடன் வலம் வரும் தோழர்கள் தவறான யுக்தியில் இருந்துவர, அதனால் தன் நண்பனை பறிக்கொடுத்து விஜய் சேதுபதி காட்டும் பாவனை வழக்கம்போல் அவர் நடிப்பை உறுதிப்படுத்துகிறது.

    மீராவுடன் கதிர் கொள்ளும் அத்துணை காதல் காட்சிகளும் படத்திற்கு வண்ணத்தை பூச, விஜய் சேதுபதி மொபைலிற்கு வரும் சில தவறான வீடியோ காட்சிகளிலிருந்து படத்தில் தீப்பற்றிக்கொள்ள, விஜய் சேதுபதி பீட்சாவை போன்ற நடிப்பையும் பரபரப்புடன் இதில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

    போலிஸில் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல தயங்கும் கதிர் (விஜய் சேதுபதி) பெண்மையின் உணர்வை கையாளும் விதம் கைத்தட்ட வேண்டிய காட்சியாக அமைகிறது.

    தன் காதலியை தவறாக புகைப்படம், வீடியோ எடுத்து விஜய் சேதுபதியை பரப்பரப்புக்கு ஆளாக்குவதன் பின்னணி என்ன? எதற்காக மீராவை பழிவாங்க வேண்டுமென நினைக்கிறார்? மீராவை தவறாக சித்தரித்து கதிர் மீது கோபத்தை வெளிப்படுத்த பார்க்கின்றனரா? இப்படி பல கேள்விக்கு சுவாரஸ்யமாக பதிலை தந்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி.

    தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு திறமை ஆரம்ப காட்சியிலே தெளிவாக தெரிய, அந்த பெண் மாடியிலிருந்து குதிக்கப்போகும் காட்சியை நாம் சீட்டின் நுனியில் பார்த்து அந்த பெண்ணை காப்பாற்றி கதை கேட்கவும் ஆசைப்படுகிறோம். அவ்வளவு அழகான ஒளிப்பதிவு. வாழ்த்துக்கள் தினேஷ். பாடல்களிலும், காதல் காட்சிகளிலும் வண்ணம் பூச, த்ரில்லர் காட்சிகளிலும் கேமரா மிரட்டுகிறது.

    சாம். சி யின் இசை படத்திற்கு பலமாக அமைய, காதல் காட்சிகளில் வரும் கவிதை வரிகளும் அற்புதம். 'மழைக்குள்ளே நனையும் காற்றை போலவா மனம்' பாடல் ஏற்கனவே மெலோடி ஹிட்டடித்த பாடலும் கூட.

    பவன் ஸ்ரீ குமாரின் கத்தரிக்கோல் 2 மணி நேரத்தை நிர்ணயிக்க, அதனால்... படத்தின் சுவாரஸ்யம் கொஞ்சமும் குறையவில்லை என்பது படத்திற்கு ப்ளஸ் தான்.

    விஜய் சேதுபதியின் நடிப்பு அட்டாகாசமாக மிரட்ட, காயத்ரி அவருக்கு இணையாக நடிக்க முயன்றிருக்கிறார்.

    ரிபெல் ஸ்டியோவின் தயாரிப்புக்கு என் வாழ்த்துக்கள்.

    இப்படி ஒரு த்ரில்லர் கதைக்களத்தை தேர்ந்தெடுத்த விஜய் சேதுபதிக்கும் வாழ்த்துக்கள். கல்லா கட்டாது என தெரிந்தும் இவர் எடுக்கும் முயற்சி பலே சொல்ல வைக்கும்.

    ஒட்டுமொத்தத்தில் புரியாத புதிர் படத்தின் புதிர்களை தெரிந்துக்கொள்ள உங்களுக்கு பொறுமை என்பது இருக்குமாயின் இந்த திரைப்படம் நிச்சயம் உங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    விறுவிறுப்பான திரைக்கதை.

    பிறருக்கு நடக்கும் கொடுமை என்பது நமக்கு நடக்கும் வரை வேடிக்கை என்பதை உணர்த்தும் புரியாத புதிர் தமிழ் சினிமாவில் மற்றுமோர் புதிய முயற்சி.

    பேய் படமா? சாதாரண படமா? என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ளவே இறுதிக்காட்சியை எட்டும் என்பதே உண்மை.

    புரியாத புதிர் - தெரியாமல் செய்த தவறுக்காக கேட்கும் மரண ஓலத்தின் சத்தம்.

    Puriyatha Puthir - Ready to see the Human soul Rage against Some Un Understandable Mistakes...

    Awesome Script with some needed Message plot....

    HATS OFF TO THE TEAM...

    - பாலகார்த்திக் பாலசுப்பிரமணியன்
     
  5. Balakarthik Balasubramani

    Balakarthik Balasubramani Well-Known Member

    Joined:
    Aug 3, 2017
    Messages:
    339
    Likes Received:
    453
    Trophy Points:
    63
    Gender:
    Male
    நெஞ்சில் துணிவிருந்தால் விமர்சனம்

    டைட்டிலே படக்கதையை பளிச்சென சொல்லும் என்பது சந்தீப் கிருஷ்ணன் உடும்பு பிடியில் தெள்ள தெளிவாய் தெரிகிறது.

    "அறம் செய்து பழகு" என முதலில் டைட்டில் வைக்கப்பட்ட., இயல்பின் மூலம் இனிய படைப்பை தமிழ் சினிமாவிற்கு அளிக்கும் சுசீந்திரனின் திரைப்படம், பின்னர் நெஞ்சில் துணிவிருந்தால் எனவும் மாற்றப்பட்டது.

    சந்தீப்பின் தந்தைக்கு தவறான சிகிச்சை மூலம் உயிரழப்பு உண்டாவதில் தொடங்கும் கதை, அதன்பின்னர் நட்புடன் உறவாடவும் தொடங்குகிறது.

    நண்பனுக்கு ஒன்றென்றால் நான் வருவேன் என வரிந்துக்கட்டி கொண்டு விக்ராந்த் கிளம்ப, அவருக்கு ஒரு பிரச்சனை என வரும்போது அதை சந்தீப் கையாளும் விதம் மிக அழகு.

    சூரி தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்ய, வைன் ஷாப்பில் இருக்கும் நம் நாட்டு மக்கள் ஒற்றுமை, மற்ற இடங்களிலும் இருந்திருந்தால் இந்தியா என்றோ வல்லரசு ஆகியிருக்கும் என சொல்வது நிதர்சன வசனம் கூட.

    ஹீரோ சந்தீப்பா, இல்லை விக்ராந்தா என குழப்பம் வர, அப்போ நான் யாரு? என மிரட்டுகிறார் துரை பாண்டியாக வலம் வரும் ஹரிஸ் உத்தமன்.

    இந்த உலகத்துல பெரிய ஆள கொலை செஞ்சா தான் எல்லாரும் அதப்பத்தியே பேசுவாங்க. அதுக்கு பின்னாடி நாங்க போடுற ஸ்கெட்ச் பத்தி போலீஸ்க்கு கூட தெரியாது போன்ற வசனங்கள் நச்.

    சாதிகா, அனுராதா என்னும் கதாப்பாத்திரத்தில் படம் முழுக்க டாக்டராக சேவை செய்யும் பெண்ணாய் வலம் வர, அறிமுக நாயகி மெஹ்ரீனுக்கு நடிக்க வாய்ப்பு குறைவென்றாலும், காட்சிகளின் அமைப்பால் அதுவும் நிறைவே.

    படத்தின் ஹீரோக்களில் ஒன்று கதையும் என்றால், இன்னொன்று சண்டை காட்சி அமைப்புகள். அன்பறிவ் என்பவரின் சண்டை காட்சி அமைப்புகள் படத்திற்கு உடும்பு பிடி தான். அதுவும் கிளைமேக்ஸ் சண்டை காட்சிகள் மிக கச்சிதம்.

    D.இமானின் பின்னணி இசை படத்திற்கு பலம். குறிப்பாக ஹரிஸ் உத்தமனுக்காக போடப்பட்ட பின்னணி இசை வில்லனுக்கான பாணியில் பட்டையை கிளப்புகிறது.

    யுகபாரதி எழுதிய, "ரயில் ஆராரோ..." பாடல் காதிற்கு தேன்சுவை சேர்த்திடுகிறது. லக்ஷ்மன் குமாரின் ஒளிப்பதிவு, உண்மை காட்சிகளை போன்று அழகாக படமாக்கப்பட்டிருக்க, அது சுசீந்திரன் படத்திற்கே உண்டான பரப்பரப்பையும் தருகிறது.

    காசி விஷ்வ நாதனின் எடிட்டிங்க் பணி, கத்தரிக்கோலை வேகமாக செலுத்த 1 மணி நேரம் 56 நிமிடங்கள் மட்டுமே கொண்டு கதைக்கு எது தேவையோ அதை மட்டுமே சிறப்பாக தந்திருக்கிறது.

    ஒட்டுமொத்தத்தில் கதைக்களத்தை யூகிக்க முடியாமல் கொண்டு நகர்த்திய சுசீந்திரன், நெஞ்சில் துணிவிருந்தால் கண்டுபிடி என கதையை மட்டும் அழகாக பேசவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்.

    நெஞ்சில் துணிவிருந்தால் - உடும்பு பிடியில் சிக்கியதோர் உணர்வு. உண்மையை உரக்க சொல்லும் சுசீந்திரனின் மற்றுமோர் மாபெரும் உன்னத படைப்பு. உலகிற்கு தேவையும் கூட...

    - பாலகார்த்திக் பாலசுப்பிரமணியன்
     
  6. Balakarthik Balasubramani

    Balakarthik Balasubramani Well-Known Member

    Joined:
    Aug 3, 2017
    Messages:
    339
    Likes Received:
    453
    Trophy Points:
    63
    Gender:
    Male
    ராட்சசன் விமர்சனம்
    தமிழ் சினிமாவில் தனித்துவமிக்க கதைகளினால் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் இது வரை வெளி வந்த அத்தனை திரைப்படங்களும் இவரது நடிப்பு திறமையை பல மடங்கு வெளிப்படுத்தி உள்ளது.

    அந்த வரிசையில் ராட்சசன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா என கேட்டால் அதற்கான பதில் 'ஆம்' என்பது தான்.

    அந்த ராட்சசன் டைட்டில் கார்டு முதல்லே படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு என்பது பெரிய அளவில் இருக்க, முதல் பாதியில் கூட யூகிக்க முடியாத கதையை அமைத்தமைக்கு இயக்குனர் ராம்குமார் அவர்களை பாராட்டலாம்.

    தொடர் கொடூர கொலைகள் அதற்கான காரணம் யார் என தலையை குழப்பி கொள்ள வைக்கும் கதைக்குள் செல்லும்போது சீட்டின் நுனிக்கு எல்லோரும் வந்து விடுகின்றனர்.

    அதற்கு ஏற்ப காதல் காட்சிகளை பெரிதும் குறைத்து 2 மணி நேரம் 50 நிமிடம் இடைவிடாது எதிர்பார்ப்புகளின் பின்னணியில் திரைப்படம் படு திரில்லிங்காக செல்கிறது.

    முண்டாசுப்பட்டி புகழ் ராமதாஸ் காமெடி, சென்டிமென்ட் என கிடைத்த ஏரியாவில் எல்லாம் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

    விஷ்ணு விஷால் கேரக்டர் மாஸாக அமைக்கப்படாமல் கதைக்கு ஏற்ப அமைத்து கன கச்சிதமாக கதையை நகர்த்தி இருப்பதால், ஆங்காங்கே நடக்கப்படும் உண்மை சம்பவங்களையும் நம் மனம் உணர செய்கிறது.

    அமலா பால் நடிப்புக்கு அவ்வளவு வேலை இல்லை என்றாலும் அது தான் இது போன்ற சைகோ திரில்லர் கதைக்கு தேவை என்பது கதை செல்லும் பாதையை பொறுத்து தெள்ள தெளிவாய் தெரிகிறது.

    கொலைகளுக்கான பின்னணியை கண்டுபிடிக்கும் காட்சிகள் சுவாரஸ்யத்தின் உச்சம். ஒவ்வொரு முறை ஏதோ ஒன்றை கண்டுபிடிக்க அதை தாண்டிய மர்ம முடிச்சுகள் போடப்பட்டு இறுதி வரை கதையை இறுக்க, ஒவ்வொரு முடிச்சுகளையும் அவிழ்ப்பது அளவில்லா அதிர்ச்சியையும், பயத்தையும் தந்துக்கொண்டே இருக்கிறது.

    பொதுவாக பேய் படம் என்றால் முதல் பாதியை படு பயங்கரமாக கொண்டு செல்ல முயன்று ஒரு நார்மல் ஃபிளாஷ் பேக்-ஐ வைத்து, தியேட்டரை விட்டு வெளியே வரும்போது பார்த்த உணர்வே இல்லாமல் பலரையும் வெளிவர செய்வர்.

    ஆனால் இத்திரைப்படம் அந்த முக சுளிப்பை கூட முறியடித்து முற்றிலும் சைகோ திரில்லராக உருவெடுத்துள்ளது.

    இக்கதை அமைப்புக்காக சைகோ பற்றிய பல உண்மை தகவல்களை திரட்டி அந்த கதாப்பாத்திரத்துக்கு உயிர் கொடுத்து உள்ளார் இயக்குனர் ராம்குமார்.

    ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். உணர்வுகளில் பயத்தை விதைத்து மிரள வைத்திருக்கிறார்.

    பி.வி.சங்கரின் ஒளிப்பதிவு, காட்சிக்கு காட்சி கொடூரமான கோணத்தில் சுற்றி விளையாடி இருக்கிறது.

    பீட்சா, இமைக்கா நொடிகள் போன்ற பல திரைப்படங்களின் வரிசையில் ராட்சசன் நிச்சயம் பார்ப்பவர்களை பயம் கொள்ள செய்வான்.

    ராட்சசன் - தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட வேண்டிய கொடூர காட்சி அமைப்பின் உச்சம். இதன்பிறகு, இது போல் பல திரைப்படங்கள் திறமையை நிரூபித்து இனிமேல் வலம் வரக்கூட வாய்ப்புள்ளது.

    - Balakarthik Balasubramanian Novelist
     

Share This Page