Woman's Life before and after marriage.....

Discussion in 'General' started by Mythili Ramjee, Dec 8, 2018.

 1. Mythili Ramjee

  Mythili Ramjee New Member

  Joined:
  Oct 24, 2018
  Messages:
  21
  Likes Received:
  15
  Trophy Points:
  3
  Gender:
  Female
  ஒரு பெண்ணின் வாழ்க்கை என்பது கால் பகுதி பிறந்தகத்தில். முக்கால் வாழ்க்கை புகுந்தகத்தில். அந்தக் கால் வாழ்க்கையிலேயும் அவளது பெரும்பான்மையான நேரம் தன் கல்யாண வாழ்வு , எதிர்காலம் இவற்றை சுற்றியே இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
  இருப்பதை விட்டுவிட்டு பறப்பதை பிடிக்க முயல்வது என்பது பெரும்பாலும் பெண்களுக்குப் பொருந்தும். பெண் தன் இளம் வயதில் எத்தனை சந்தோஷமாக, சுதந்திரமாக இருக்க முடியுமோ இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். இதை நான் பதிவிடுவதால் இளம் பெண்கள் பயப்பட வேண்டாம். அந்தக் கால கட்டம் என்பது எந்த வித பயம், அச்சம், பதட்டம், எதிர்கால சிந்தனை, குடும்ப பிரச்சனை எதுவும் அறியா பருவமாகும். அதனை நொடிக்கு நொடி அனுபவிக்க வேண்டும் என்பது எனது வாதம். அதை விட்டு விட்டு நாம் யாரை கல்யாணம் செய்யப்போகிறோம் ? அவர்கள் எப்படி இருப்பார்கள்? இது இப்படியா அது அப்படியா ? என்று எல்லாம் யோசித்துக் கொண்டு தற்போதைய சந்தோஷங்களை நழுவ விடாதீர்கள். கட்டாயம் கல்யாண கனவுகள் என்பது அவசியமே. அதை நான் மறுக்கவும் இல்லை மறைக்கவும் இல்லை. அந்தக் கனவில் சந்தோஷங்களை மட்டும் காணுங்கள் . பிரச்சனை பகுதிகளை ஆராயாதீர்கள்.
  ஒன்று சத்தியமாக சொல்கின்றேன். கல்யாணத்திற்கு முன் உள்ள வாழ்க்கை என்பது நமக்காக நாம் வாழும் வாழ்க்கை. கல்யாணத்திற்கு பிறகு உள்ள சகாப்தம் மற்றவர்களுக்காக நாம் வாழும் வாழ்க்கையாகும் . இதை பலர் வெளிப்படையாக கூற மறுத்தாலும் உண்மை இதுவே.
  இதை நான் கூறுவதால் கல்யாண வாழ்க்கை என்பது ஒரு கசப்பான பகுதி என்று கூற வரவில்லை. அப்படிக் கூறி விடமுடியுமா என்ன? கல்யாணத்திற்கு முன் நாம் நம் பிறந்தகத்தில் ஒரு அங்கத்தினர் அவ்வளவே. ஆனால், கல்யாணம் ஆனவுடன் நமக்கு குடும்ப குத்துவிளக்கு, குடும்பத்தலைவி என்று பல பட்டங்கள் உண்டு . பட்டங்களை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா? வேண்டவே வேண்டாம். அதற்குரிய மரியாதை, தைரியம் தானாக அமையும் என்பது சாஸ்திரம். கல்யாணம் ஆன பெண்ணிற்கு ஒரு மிடுக்கும், தைரியமும் இயற்கையாய் வந்துவிடும் என்பதுதான் ஆச்சரியம்!!
  கல்யாணத்திற்கு முன், கல்யாணத்திற்கு பின் என்கிற இந்த இரண்டு சகாப்தங்களையும் அனுபவித்தப் பெண் எப்பொழுதுமே தன் பிறந்த அகத்தில் தான் பிறந்து வளர்ந்த கதையை தீராமல் சொல்லி சொல்லி மகிழ்வாள். முதலில் தோழிகளிடம், பின்பு கணவர் அப்புறம் குழந்தைகள் கடைசியில் பேரக்குழந்தைகள் என்று அவர்கள் சந்தோஷ தருணங்களை அனுபவித்து கூறும் அழகு என்பது அலாதி.
  பிறந்தகத்தில் எங்குவேண்டுமானாலும் சுற்றலாம், யாருடனேயும் பேசலாம், பழகலாம், இஷடம் போல் சாப்பிடலாம். தனக்கு பிடித்த ( நாகரிகமான) உடைகளை தயக்கமின்று உடுத்தலாம். கண்ணாடி முன் எவ்வளவு நேரமானாலும் செலவழிக்கலாம். இது எல்லாம் புகுந்தகத்தில் ஆரம்ப நாட்களில் அதுவும் கூட்டுக குடும்பத்தில் கிட்டோமோ? கட்டாயம் நடக்காது.
  நன்றாய் நினைவிருக்கிறது. நான் கல்யாணம் ஆகி கூட்டுக் குடும்பத்தில்தான் இருந்தேன். அப்பொழுது நான் உபயோகப்படுத்தி இருந்த சோப்பு காலி ஆகிவிட்டது என்று என் கணவரிடம் சொல்லி ஒன்று புதியதாய் கேட்டேன். மத்தியானம் என் மாமனார் என்னிடம் வந்து " உனக்கு சோப்பு வேண்டுமானால் என்னிடம் தான் கேட்க வேண்டும். ஏன் என் மகனிடம் கேட்டாய் ? இந்த ஒரு தடவை சரி. இனி என்னிடம் தான் கேட்கவேண்டும். நான்தான் குடும்ப தலைவர் " என்றார். எனக்கு பக் என்று இருந்தது. காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிட்டது போங்கள் .
  நாம் பிறந்து வளர்ந்து பல வருடங்கள் உலா வந்த அகத்தை விட்டு ஒரு புது இடம், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என்று எல்லாமே புதிதான ஒரு சூழலில் உள் நுழையும் பொழுது சற்று பயம் இருக்கத்தான் செய்யும். ஆனால் , அது ஒரு இன்ப , குதூகல வாழ்க்கைக்கு ஒரு அஸ்திவாரம் என்பதை புரிந்துக் கொண்டால் அது சொர்க்கலோகம் பெண்ணே!
  நாம் சாப்பிட்ட சாப்பாட்டிற்கும் அவர்கள் அகத்தில் தயாரிக்கும் உணவிற்கும் சில பல வித்யாசங்கள் கட்டாயம் இருக்கும். உதாரணத்திற்கு என் பிறந்தகத்தில் இருந்த வரையில் நான் வெங்காயம் சுத்தமாய் கண்ணில் பார்த்ததில்லை. அங்கோ அது இல்லாமல் சமையல் இல்லை . ஞாயிற்றுக்கிழமைகளில் , சின்ன வெங்காய சாம்பார், வெங்காயம் சேர்த்த கீரை கூட்டு, பூண்டு ரசம் இப்படி . குமட்டும். பல நாட்கள் பட்டினியாக இருந்திருக்கின்றேன். அதற்காக வாழ்க்கை வெறுத்து விடாது.
  கூட்டுக் குடும்பம் என்பதால் நம் விருப்பு , வெறுப்புகளை உடனே வெளிப்படுத்துவது என்பது மிக சிரமம். அப்பொழுது என் கணவரின் அன்பு முகத்தைப் பார்ப்பேன். அவர் என்பால் வைத்துள்ள காதல் என்னை கட்டிப் போட்டுவிடும். மெதுவாக அவரிடம் எனக்கு வெங்காயம் பிடிக்காது என்பதை சொன்னேன். அப்புறம் என் மாமியார் கொஞ்சம் எனக்காக தனியாக எடுத்து வைக்க சம்மதித்தார். கண்டிப்பானவர் . எதையும் தன்னைக் கேட்டுதான் செய்யவேண்டும் என்பதில் ஒரு வட்டம் போட்டு வைத்திருந்தார்.
  காலப்போக்கில் எல்லாம் சரியாகி விடும் என்பதில் கொஞ்சமும் ஐயம் இல்லை. இல்லற சுகத்தை அனுபவிக்க வேண்டுமெனில் சற்று பொறுமை தேவை பெண்களுக்கு. அது இருந்தால் போதும் எதையும் எளிதில் சமாளித்து விடலாம்.
   

Share This Page